புகார்த் தலைநகரத்துக்குப் பத்து கல் தொலைவிலுள்ள பெருவெளியொன்றில் பாண்டிய நாட்டுப்படை வீரர்கள் இறங்கி தங்குவதற்கேற்ற கூடாரங்களை அமைக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தனர்; தளபதி நெடுமாறன், தன் துணைத் தளபதியிடம் போர்முறைகள் எப்படியெப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விவாதித்துக் கொண்டிருந்தான். அவன் தங்கியிருந்த முகப்பில் மீனக்கொடி கம்பீரமாகப் பறந்து கொண்டிருந்தது. கூடாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள் போர்ப்பரணி பாடியவாறு ஆடி ஓடி மகிழ்ந்தனர். போர்ச் செய்தி கேட்டதும் அவசர அவசரமாகப் போர்க் கருவிகளைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்தவர்கள், அந்தக் கருவிகளை மெருகேற்றிக் கூர்மையாக்கிக் கொண்டிருந்தார்கள். சமையற் கலையிலும் வல்லவராயிருந்த சில வீரர்கள் உணவு தயாரிக்கும் அலுவலில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
முரசுபோல் காணப்படும் பாத்திரங்களில் ஊற்றி வைக்கப்பட்டிருந்த கள்ளை ஒரு வீரன் எல்லா வீரர்களுக்கும் அளவோடு வழங்கிக் கொண்டிருந்தான். அதை அருந்தியவர்கள் புது ஊக்கமும் அருந்தாதவர்கள் அருந்தப் போகிறோம் என்ற புது உற்சாகமும் பெற்றுக் காட்சி தந்தார்கள்.
போராட்டக் களிப்பில் மூழ்கியிருந்த அவர்கள் எல்லாரும் திடுக்கிட்டுத் திரும்பும் அளவுக்குக் குதிரையொன்றின் குளம்படி ஓசை பாசறையை நோக்கி வந்து கொண்டிருப்பதை உணர்ந்தனர். வீரர்களின் கரங்கள் அவர்களை அறியாமலேயே வாட்களை ஏந்திக் கொண்டன. ஒரே அமைதி! ஒலி வரும் திக்கிலேயே படை வீரர்களின் பார்வை நின்றது. தளபதி நெடுமாறன் தனது கூடாரத்தை விட்டு எழுந்து வெளியே வந்து நின்றான். தங்கள் வாளுக்கு ஏதோ ஓர் இரை வருகிறது என ஓவ்வொரு வீரரும் எண்ணிக் கொண்டு காத்திருந்தனர்.
ஓசை மிக அருகே வந்துவிட்டது. மேலும் கூர்மையாக அனைவரும் கவனித்தனர். குதிரை, தளபதி நெடுமாறனை நோக்கி வந்து கொண்டிருந்தது. சந்தேகமில்லை. அதன் மீது அமர்ந்திருப்பவன் வேளிர்குடியைச் சேர்ந்த வீரன்தான். அவனைக் கண்ட பாண்டிய நாட்டார் வாளுருவிப் பாய்ந்தனர். வீரன், குதிரையை விட்டுக் கீழே