உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரியாரும் சமதர்மமும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

பெரியாரும்‌ சமதர்மமும்‌

முதல் நாத்திக மாநாடு நடந்தது. அதற்குத் தலைவர் யார்? தோழர் ம. சிங்கார வேலர். வரவேற்புக் குழுத் தலைவர் காஞ்சிபுரம் நாத்திக சி.கே.குப்புசாமி ஆவார். பொருளாளர் எவர்? குஞ்சிதம் அம்மையாரின் தந்தையார் திரு.தி.சு. சுப்ரமணியம். அம்மாநாட்டில் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, தனது மனைவி ரெங்கநாயகி, மகள் மிராண்டா ஆகியோரோடு கலந்து கொண்டார். அம்மாநாட்டில், பின்னர் என்னை மணந்து கொண்ட காந்தம்மாவும், அவருடைய தங்கை வெங்கடேசம்மாளும் கலந்து கொண்டதைக் குறிப்பிட வேண்டும். அம்மாநாட்டு வரவு செலவுக் கணக்கு சில வாரங்களுக்குப் பின், ‘புரட்சி’யில் வெளியாயிற்று. செலவு இருநூற்றுச் சில்லரை ரூபாய்களே. நிற்க.

‘புரட்சி’யில் தோழர் ப.ஜீவானந்தம் தொடர்ந்து கட்டுரைகளும், பாட்டுகளும் எழுதி வந்தார். 25-2-34 நாளைய புரட்சியில் ஜீவா எழுதிய ‘ரஷ்யாவின் பாடம்’ என்னும் பாடல் முதல் பக்கத்தில் வெளியாயிற்று. ஒரு பக்க அளவு உள்ள அப் பாடலில்,

வேதம் ஜபதபம் வீழ்ந்து போச்சு
மின்சாரத்தால் வாழ்வு மேன்மையாச்சு
ஆதரவில்லை மதங்களுக்கே
அடிமாண்டது ஆதிக்கப் பேய்கிறுக்கே’

என்று பாடிப் பூரித்தார்.

பாட்டோடு நின்றாரா? அதே இதழில், அவர் சமதர்மம் என்றால் என்ன என்று விளக்கும் கட்டுரையையும் எழுதினார். ‘காம்ரேட்’ என்னும் புனை பெயரில் எழுதிய மற்றோர் கட்டுரையின் தலைப்பு பொது உடைமையும் காந்தியப் பொருளாதாரமும் என்பதாகும்.

அக்கால கட்டத்தில், தோழர் ஜீவானந்தத்திற்குப் ‘புரட்சி’யில் தாராளமாக இடம் கிடைத்தது. 29-4-34 நாளைய புரட்சி, ‘தொழிலாளர் எழுச்சி’ என்னும் பாடலை வெளியிட்டது.

கோடிக்கால் பூதமடா தொழிலாளர்
கோபத்தின் ரூபமடா’

எனப் புகழ் பெற்ற அப்பாடல் தொடங்குகிறது.