23. இந்தி எதிர்ப்பு முதன்மை பெற்றது
ஆயிரம் ஆண்டுகளாகக், கல்வியின்மேல் நாட்டம் இல்லாதிருந்த தமிழர்களிடையே, நீதிக் கட்சியின் தொண்டும், தன்மான இயக்கப் பணியும் ஓரளவு—பெருமளவல்ல—படிப்பார்வத்தைத் தூண்டின. உயர் நிலைப் பள்ளிகள் நெடுந்தொலைவில் இருந்த காலம் அது. அப்பள்ளிகளின் அருகில் இருந்த சில பார்ப்பனரல்லாத குடும்பங்களாவது பிள்ளைகளை, அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முன் வந்தார்கள். அதுவே, தங்களுக்குக் கடும் போட்டியாக வருமென்று கால காலமாகக் கல்வி பெறுவோர் அஞ்சினர்.
ஒரே நேரத்தில், இரு புது மொழிகளை ஆறாம் வகுப்பில் புகுத்தி, இரண்டிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான், ஏழாவது வகுப்பிற்குப் போகலாம் என்று ஆணையிடுவது கல்வியைத் தேடி வரும் புதிய தலை முறையை மட்டம் தட்டி அனுப்புவதாகும் என்று பொது மக்கள் கருதினார்கள். அக்கருத்து கற்பனையென்று ஒதுக்கி விடுவதற்கு இல்லை.
கட்டாய இந்தியைக் கொண்டு வந்தது, சமதர்மக் கொள்கைப் பரப்புதலைத் திசை திருப்பும். ஆயினும், அது பொதுமக்களின், பொதுக் கல்வியின் தலையில் மண்ணை வாரிக் கொட்டும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை. குறிப்பாகத் தமிழ் மக்கள், பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏன்?
தமிழ் மொழியின் எழுத்து, இந்தி எழுத்துக்கு மாறானது. ஆறாம் வகுப்புப் படிக்கும் தமிழ்க் குழந்தை, தமிழ் எழுத்து, ஆங்கில எழுத்து, இந்தி எழுத்து ஆகிய மூன்றையும் சமாளிக்க வேண்டும். மூவகை இலக்கணங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.
முந்தைய தலைமுறை வரை எழுத்தறிவு பெறாதவர்களுக்கு இதைச் சமாளிக்க முடியாது. இதை உணர்ந்த பொதுமக்கள் கொதிப்படைந்தார்கள். நெடுங் காலமாகத் தமிழ்நாட்டுப் பொது மக்களின் நலன்களைக் கவனிக்கும் பெரிய அமைப்பு கிடையாது.