25. திராவிடநாடு கோரிக்கை:
ஆங்கில அரசு புறக்கணித்தது
நாட்டு மக்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர்கள் போல், தற்குறிகளாக இருந்தார்கள்; படித்த சிலரும் அறிவு பெறவில்லை; அறியாமை, மூட நம்பிக்கை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கும் படிப்பைப் பெறவில்லை. அவற்றை நியாயப்படுத்தும் பாடங்களையே படித்தார்கள்; பதவிகளைத் தேடுவதே அவர்கள் குறிக்கோள்.
பொதுமக்கள் சில ஆயிரம் ஆண்டுகளாக, அரசியலில் உள்நாட்டு மன்னர்களுக்கோ, வெளிநாட்டு மன்னர்களுக்கோ அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். மன்னராட்சியை மாற்றி, மக்களாட்சியை உருவாக்க வேண்டும் என்னும் குடியாட்சி உணர்வையே பெறாது இருந்தவர்கள் நம் மக்கள். சமயத்தின் இரும்புக் கரங்கள், நம் மக்களின் சிந்தனையை மரக்க வைத்த அளவு, பிறநாட்டு மக்களின் சிந்தனையை வீழ்த்தவில்லை,
‘ஏழ்மை, கடவுளின் கட்டளை’ என்று நம்பியோர் பிற நாடுகளில் இருந்தாலும், சமுதாயத்தின் நிலைக்கு, ‘பொதுமக்களும் பொறுப்பானவர்கள்—முழுப் பொறுப்பாளர்கள் அல்லாத போதிலும், பெரும் பொறுப்பாளர்கள்’ என்னும் கருத்து பிறநாட்டு அறிஞர்களிடையே அதிகம் பரவிற்று; செயல்பட்டது.
எந்த நாட்டிலும், கூட்டத்திற் கூடி ஆதரிக்கும் அத்தனை பேரும் போராட்ட வீரர்கள் ஆவதில்லை. இருப்பினும் ‘நாட்டத்திற் கொள்ளாத’ மக்கள் நம்மிடையே இருக்கும் பெரும் விழுக்காட்டில், பிற பிரிவினரிடையே இல்லை.
இறை நம்பிக்கையுடைய இஸ்லாமியர்கள் படத்தையோ, உருவத்தையோ அண்ட விடுவதில்லை; எதற்கும் பால் முழுக்கு, இளநீர் முழுக்கு, தேன் முழுக்குப் போட்டு உணவுப் பொருள்களைப் பாழாக்குவது இல்லை.