178
பெரியாரும் சமதர்மமும்
திராவிடர் கழகத்தின் எதிர்ப்பை ‘தேச பக்தர்கள்’ சமாளித்துக் கொள்வார்கள் என்று சாடை காட்டி, உசுப்பினார். அப்புறம் கேட்க வேண்டுமா?
திருச்சி போன்ற சில நகரங்களில், இராஜாஜியின் ஆதரவாளர்கள், வன்முறையில் இறங்கினார்கள்; திராவிடர் கழகத்தவர்களைத் தாக்கினார்கள். அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. போதிய விழிப்போடு, தடுக்கவில்லை; வன்முறையாளர்களின் துணிச்சல், விவேக வரம்பைத் தாண்டி விட்டது.
திருச்சியில், பெரியார் சென்று கொண்டிருந்த வேனை மடக்கி, அட்டகாசம் செய்தார்கள்; வண்டிக்குச் சேதம விளைத்தார்கள். பெரியாரையும் தாக்க முயன்றார்கள். அக்கம் பக்கத்தவர்கள் வந்து, நிலைமை மேலும் மோசமாகாதபடி, காப்பாற்றினார்கள். அச்செய்தி அறிந்து, ஆயிரக் கணக்கானவர்கள், பெரியார் மாளிகைக்கு வந்து குவிந்து விட்டார்கள். பெரியார், பொறுமையின் திருவுருவமாக இருந்து, அவர்களை அமைதிப் படுத்தாதிருந்தால், என்ன ஆகியிருக்குமோ?
அடுத்து, சேலம் மாவட்டம் ஆத்தூரில், திராவிடர் கழக மாநாடு நடந்தது. தந்தை பெரியார் ஆலோசனைப்படி, திராவிடர் கழகத்தவர்கள், தற்காப்பின் பொருட்டு, சட்ட வரம்பிற்குட்பட்ட சிறு கத்தியை வைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் அதைப் பயன்படுத்த, பெரியார் விடவில்லை.
‘சூத்திரன் என்றால், ஆத்திரங் கொண்டு அடி,’ என்று முழங்க வைத்த பெரியார், என்றும வன்முறைக்கு இடங் கொடுத்ததே கிடையாது. அமமுறையும் இடங் கொடுக்கவில்லை. ஊர் ஊராகச் சென்று, குலக் கல்வித் திட்டத்திற்கு எதிரான கருத்தை வளர்ப்பதில் மட்டுமே, முழு மூச்சுடன் ஈடுபட்டார்.
மக்கள் எதிர்ப்பு பெருகப் பெருக, குலக் கல்வித் திட்டத்தைக் கை விட்டால்தான், தமிழ்நாட்டில் காங்கிரசு கட்சி தன் செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமென்பது, காங்கிரசாருக்குப் புலப்பட்டது. ஆச்சாரியாரோ, அடம் பிடித்தார்.
‘இராமானுசரும், மாதவரும் சீடர்களைக் கேட்டா இயங்கினார்கள்?’ என்று கேட்கத் தலைப்பட்டார்.