உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/18

விக்கிமூலம் இலிருந்து

18. புரட்சி ஏட்டில் சமதர்ம முழக்கம்

பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதற்காக, ஈ.வெ. ராமசாமியும், அவரது தங்கை கண்ணம்மாளும் சிறைத் தண்டனை பெற்றதால், சமதர்மப் பேச்சு அடங்கி விட்டதா? இல்லை. சீரிய கருத்துக்களைக் கொடிய அடக்கு முறைகள் அழித்ததில்லை. உலக வரலாற்றின் சுருக்கம் இதுவே.

புரட்சியின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற ஈ.வே.ராவின் அண்ணணார், தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, இயக்கத் தோழர்களுக்குத் தெம்பூட்டினார். தன் கையெழுத்திட்டு எழுதிய 28-1-34 நாளையத் தலையங்கத்தில் அவர் கூறியதைக் கவனிப்போம். ‘நமது கொள்கை சமதர்மமும், சமத்துவமுமானதற்கேற்றபடி, நமது இயக்கத்தவர்களும், ஒருவருக்கொருவர் சமமானவர்களே ஆவார்கள்’ இப்படி உணர்த்தி விட்டு, பெரியார், வெளியில் இல்லாத போது, தானே பெரியாராகக் கருதிக் கொண்டு, அவரது தொண்டினைச் செய்ய வேண்டும் என்று வழிகாட்டினார். மற்றவர்களுக்குக் காட்டிய வழியை, அவரும் பின்பற்றினார். எப்படி? சமதர்மத்திற்கு ஆதரவான கட்டுரைகளை வாங்கி, வெளியிட்டதால், சமதர்ம மாநாடுகளை நடத்தும்படித் தூண்டியதால், தமிழ்நாடு மாகாண முதல் சமதர்ம மாநாடு மன்னார்குடியில் நடந்த போது, அதில் பங்கு கொண்டதால்.

கடவுள் நம்பிக்கையை அலசிப் பார்க்காமலே, சமதர்மக் கோட்பாட்டினை நடைமுறைப் படுத்தி விடாலாமென்ற விபரீத சிந்தனை, இன்று உலவக் காண்கிறோம். இது நிலத்தைப் பண்படுத்தாமலே, பயிரிடலாம் என்று முயல்வதற்கு ஒப்பாகும். இது, இக்கால சமதர்ம இயக்கத்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். சமத்துவத்திற்கும், சமதர்மத்திற்கும் பக்குவப்படுத்த, கடவுள், கற்பனைப் பூண்டுகளை, அவற்றோடு கலந்த சக்தி உணர்வுகளை, உழுது மிதித்து விட வேண்டுமென்று செயல்பட்டார்கள்.

ஈ. வெ. ராமசாமி விசாரணக் கைதியாக, சிறையில் அடைபட்டுக் கிடக்கையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, சென்னையில் முதல் நாத்திக மாநாடு நடந்தது. அதற்குத் தலைவர் யார்? தோழர் ம. சிங்கார வேலர். வரவேற்புக் குழுத் தலைவர் காஞ்சிபுரம் நாத்திக சி.கே.குப்புசாமி ஆவார். பொருளாளர் எவர்? குஞ்சிதம் அம்மையாரின் தந்தையார் திரு.தி.சு. சுப்ரமணியம். அம்மாநாட்டில் தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி, தனது மனைவி ரெங்கநாயகி, மகள் மிராண்டா ஆகியோரோடு கலந்து கொண்டார். அம்மாநாட்டில், பின்னர் என்னை மணந்து கொண்ட காந்தம்மாவும், அவருடைய தங்கை வெங்கடேசம்மாளும் கலந்து கொண்டதைக் குறிப்பிட வேண்டும். அம்மாநாட்டு வரவு செலவுக் கணக்கு சில வாரங்களுக்குப் பின், ‘புரட்சி’யில் வெளியாயிற்று. செலவு இருநூற்றுச் சில்லரை ரூபாய்களே. நிற்க.

‘புரட்சி’யில் தோழர் ப.ஜீவானந்தம் தொடர்ந்து கட்டுரைகளும், பாட்டுகளும் எழுதி வந்தார். 25-2-34 நாளைய புரட்சியில் ஜீவா எழுதிய ‘ரஷ்யாவின் பாடம்’ என்னும் பாடல் முதல் பக்கத்தில் வெளியாயிற்று. ஒரு பக்க அளவு உள்ள அப் பாடலில்,

வேதம் ஜபதபம் வீழ்ந்து போச்சு
மின்சாரத்தால் வாழ்வு மேன்மையாச்சு
ஆதரவில்லை மதங்களுக்கே
அடிமாண்டது ஆதிக்கப் பேய்கிறுக்கே’

என்று பாடிப் பூரித்தார்.

பாட்டோடு நின்றாரா? அதே இதழில், அவர் சமதர்மம் என்றால் என்ன என்று விளக்கும் கட்டுரையையும் எழுதினார். ‘காம்ரேட்’ என்னும் புனை பெயரில் எழுதிய மற்றோர் கட்டுரையின் தலைப்பு பொது உடைமையும் காந்தியப் பொருளாதாரமும் என்பதாகும்.

அக்கால கட்டத்தில், தோழர் ஜீவானந்தத்திற்குப் ‘புரட்சி’யில் தாராளமாக இடம் கிடைத்தது. 29-4-34 நாளைய புரட்சி, ‘தொழிலாளர் எழுச்சி’ என்னும் பாடலை வெளியிட்டது.

கோடிக்கால் பூதமடா தொழிலாளர்
கோபத்தின் ரூபமடா’

எனப் புகழ் பெற்ற அப்பாடல் தொடங்குகிறது.

‘யாவும் எனதுடைமை —புவிமிசை யாவும் எனக்குரிமை’ என்று ஜீவா எக்காளமிட்டு, அய்ம்பத்து நான்கு ஆண்டுகள் முடியப் போகிறது. நாமோ, வேறு பக்கம், பொய்ம்மான் வேட்டையாடிக் கொண்டே இருக்கின்றோம்.

புரட்சியில், சிங்காரவேலர், செ.தெ.நாயகம், சிதம்பரனார், சித்தக்காடு இராமையா ஆகியோர்களும் எழுதினர்.

ஈ.வெ. ராமசாமி சிறையில் இருக்கையில், பம்பாயில் ஆலைத் தொழிலாளர் எண்பதாயிரம் பேர்கள் வேலை நிறுத்தத்திற்குத் தள்ளப்பட்டார்கள். பெரியார் வெளியே இருந்தால், எவ்வளவு ஆர்வத்தோடு, தொழிலாளர்களை ஆதரிப்பாரோ, அதே ஆர்வத்தோடு, புரட்சி ஆதரித்தது. முதலாளித்துவத்தைக் கண்டிப்பதிலும் சூடு தணியவில்லை.

‘குருட்டு முதலாளியும், செவிட்டு சர்க்காரும்’ என்ற தலைப்பில் ‘காம்ரேட்’ என்ற பெயரில் ஜீவா எழுதினார். அதில், அவர் அடிக் கோடிட்டுக் காட்டியபடி, முதலாளியும், ஆட்சியும் கை கோத்து நிற்பதையும் தாண்டியே, சமதர்ம உலகத்தைத் தரிசிக்க முடியும். இதை இளைய தலைமுறை உணர்ந்து விழித்து விட்டால்? சாதிக் கொடுமைகளும், வறுமைப் பாறைகளும் திமுதிமு எனச் சரிந்து விழும்.

ஜீவானந்தம் எழுதியது போல, சே. நரசிம்மன், எம்.ஏ. ‘போல்சுவிக் ஆட்சி எல்லாத் தேசங்களிலும், நன்மை பயக்குமா?’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதினார். நாகை தோழர் டி.என். இராமச்சந்திரன் என்பவர், பகுத்தறிவிற்கும், சமதர்மத்திற்கும், உரமூட்டும் ஆய்வுக் கட்டுரைகளைத் தமிழில் பெயர்த்துக் கொடுத்து உதவினார்.

‘சமதர்ம உலகைக் காண யுவர்காள் வம்மின்’ என்று, கொழும்பு எம்.கே.எம்.காதர் என்பவர் எழுதினார்.

பல சமயத்தவர், பல நிலையினர், அச்சமின்றித் தொடர்ந்து ‘புரட்சி’யில் எழுதி வந்தார்கள்.

அப்போதைய இந்திய சட்ட மன்றத்தில், தோழர் ஜோஷி என்பவர் ‘வேலை இல்லாத கஷ்டத்திலிருந்தும், சம்பளக் குறைவிலிருந்தும், தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு அனுபவ சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். என்ற முடிவினை முன்மொழிந்தார். இப்போதுள்ள இந்திய ஆட்சிகளே கையை விரித்து விடும். அன்றைய ஆங்கிலேய ஆட்சி ஆதரவு தரவில்லை. அதைக் கண்டித்து, ‘பாதுகாப்பு மன்னர்களுக்கா? பட்டினிகளுக்கா?’ என்று புரட்சி, தலையங்கம் தீட்டியது.

பெரியார் மூட்டிய சமதர்மத் தீ, கொழுந்து விட்டெரியும்படி பார்த்துக் கொண்டார்கள் இயக்கத் தோழர்கள். அதில், குறிப்பிடத்தக்கது, இராமநாதபுரம் மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த சுயமரியாதை மாநாடாகும். அதற்குச் சில வாரங்களுக்கு முன் நடந்த மன்னார்குடி சமதர்ம மாநாடும் பெருமைக்குரியது.

உலகத் தொழிலாளர் நாளாகிய மே நாளைச் சிறப்பாகக் கொண்டாடச் செய்தது ‘புரட்சி’. சோவியத் ஆட்சியின் இரண்டாவது அய்ந்தாண்டுத் திட்டம் பற்றிய கட்டுரையை வெளியிட்டது ‘புரட்சி’. ஆங்கில நாட்டின் இலக்கிய மேதையாக விளங்கிய பெர்னாட்ஷா, பொது உடைமை பற்றிக் கூறியவற்றை வெளியிட்டது ‘புரட்சி’. அவற்றை நீங்களும் தெரிந்து கொள்வது நல்லது. அவை இதோ!

‘பொது உடைமை பரவப் பரவ நாகரிகம் வளரும்.’
‘பொது உடைமையின்றி நாம் வாழ முடியாது’
‘நாளேற நாளேற, பொது உடைமை வாழ்வு மலர்ந்து வருகிறது’

தந்தை பெரியார், பொது உடைமைக் கொள்கையைப் பரப்பியதற்காகச் சிறை பட்ட பிறகும், அவருடைய வார இதழாகிய ‘புரட்சி’ அதே பணியினைச் செய்து வந்தது.

‘போல்சுவிக்கியக்கம்—லெனின் வெற்றி’ என்னும் கட்டுரை 29-4-34 இல் வெளியாயிற்று. இரஷ்ய சிறைச்சாலைகள், குற்றவாளிகளை நடத்தும் முறையைப் பற்றிய கட்டுரை வெளிவந்தது.

புரட்சியின் மற்றோர் இதழ், ‘இன்றைய இரஷ்ய—குழந்தை இல்லங்களும், அரண்மனைகளும், ஆண் பெண் உறவும்’ என்ற நீண்ட தலைப்புடைய கட்டுரையைத் தாங்கி வெளி வந்தது அக்கட்டுரை. சோவியத் நாட்டிற்குச் சென்று வந்த, நித்திய நாராயண பானர்ஜி எழுதியது. அதை ஏ. வி. சீனிவாசன் என்பவர் மொழி பெயர்த்திருந்தார். இக்கட்டுரை அடுத்த இதழிலும் தொடர்ந்து வந்தது.

‘எல்லா உற்பத்திச் சாதனங்களையும், ஏகோபித்த கூட்டுறவு முறையில் சொந்தமாக்குவதோடு மாத்திரம், சோசலிசம் நின்று விடுவதில்லை.’

உற்பத்திப் பொருள்களைச் சரிசமதையாக வினியோகப் படுத்துவதில், அதிகம் முனைந்து நிற்கிறது. இதைச் சுட்டிக் காட்டிய கட்டுரை, இந்தியாவின் தனித்தன்மையை நினைவில் கொண்டு சரியான வழி காட்டியது. அதைப் பார்ப்போம்.

‘தொழிலாளர்களை ஒன்று படுத்துவதற்கு முன்பு—அதுவும், அவர்களுடைய அடிமைத் தன்மை—அறியாமை—அந்தகாரம்—மூடக் கொள்கைகள் முதலிய யாவும் மற்றும் ஆட்சியாளர் நலனுக்காகக் கங்கணம் கட்டிக் கொண்டு வீறிட்டு நிற்கும் சமஸ்தானாதிபதிகள்—பிரபுக்கள்—நிலச்சுவான்தாரர்கள் முதலிய முதலாளித்துவ ஆக்கங்கள் யாவும் இவை போன்ற பிற நூற்றுக் கணக்கான சக்திகளோடு, எதிரிட்டுப் போராட வேண்டுமென்று அறிவுறுத்தியது.’

நூற்றுக் கணக்கான ஆதிக்கங்களை எதிர்த்துப் போராட என்ன தேவை என்பதையும், ‘புரட்சி’ இதழின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

‘தேவையான விரைவான, நடவடிக்கையானது, தொழிலாளர்களையும், தாழ்த்தப்பட்ட வகுப்பார்களையும் ஒன்றுபடுத்தி, அவர்களுக்கு ரோஷத்தைக் கிளப்பி விட்டு, சோசியலிசத்துக்குச் சரியாகக் கொண்டு செலுத்துவதேயாகும்’ என்று திசை காட்டிற்று.

உலகின் எந்த நாட்டிலும், பிறவியைக் காட்டித் தாழ்த்தப்பட்டவர்கள் கிடையாது. மற்ற தனியுடைமை நாடுகளில், ஏழை, பணக்காரன் என்ற இரு பிரிவே உண்டு. இவை நிலையான பிரிவு அல்ல; பிறவி பற்றிய பிரிவும் அல்ல; ஏழை, சட்டத்திற்குட்பட்டோ, சட்டத்திற்கு அப்பாலோ, பணக்காரனாகி விட முடியும், ஆவதைக் காண்கிறோம். சில வேளை, பணக்காரன், ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி, ஏழையாலதையும் காணலாம். ஆனால், தாழ்த்தப்பட்ட வகுப்பார், ஆயுள் உள்ள வரை தாழ்த்தப்பட்டவர்களே; எவ்வளவு படித்தாலும் தாழ்த்தப்பட்டவர்களே; எவ்வளவு நுட்பத் திறன் பெற்றாலும், அந்நிலையே. எவ்வளவு குணசீலனாயினும், அத்நிலையை விட்டு மீள முடியாது. இக்கொடுமையின் விளைவு என்ன? இந்தியச் சமுதாயத்தின் ஆறில் ஒரு பங்கினர், ஒட்டு மொத்தமாக ஒடுக்கப்பட்டவர்கள்.

எல்லாச் சாதிகளிலும், சில சிறு பெரு முதலாளிகளைக் காண முடியும். சிறுபெரும் நில உடைமைக்காரர்களைக் காண முடியும். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பாரில், முதலாளி உண்டா? இல்லை; பண்ணையார் உண்டா? இல்லை; குறுநில மன்னர் உண்டா? இல்லை.

அய்ம்பது ஆண்டுகள் வரை அத்தனை கோடி தாழ்த்தப்பட்டோரும், அன்னக் காவடிகள் என்று கூடச் சொல்லி விடலாம். அப்படியென்றால், அத்தனை கோடி மக்களும் சமதர்மத்திற்காகக் களத்தில் நின்று போராட வேண்டியவர்கள்.

‘சாதியும் ஒழிக; தனியுடைமையும் ஒழிக’ என்று வீறு கொண்டு, போராடுவதற்கு உரிமையும், தேவையும் இருந்த அப்பெரும் பிரிவின், மான உணர்ச்சியை நாம் தூண்டி விட்டோமா? அவர்களுக்குச் சமதர்ம திசை காட்டி, அவர்களோடு இணைந்து நடந்தோமா?

தொழிலாளர்களை மட்டும் அணி சேர்த்த, இந்திய பூர்ஷ்வா இனம், தாழ்த்தப்பட்டவர்களுக்காகவும் போராடி, அவர்களோடும் கைகோத்துப் பாடுபட்டிருந்தால், சாதிக் கொடுமையும், பணக் கொழுப்பும், தனியுடமையும் இதற்குள் பழங்கதையாகியிருக்கும். வருங்காலத்தில், அப்படி நடக்குமென்று எதிர்பார்த்துத் தாழ்த்தப் பட்டோர் ஏமாறக் கூடாது.

‘காலுக்குச் செருப்புமில்லை; வயிற்றுக்குக் கூழுமில்லை’ என்பது, அய்யருக்கோ, முதலியாருக்கோ, பிள்ளைக்கோ வந்துள்ள நோயல்ல. இந்நோய் நாய்க்கர் பிரிவையோ, நாடார் பிரிவையோ, வாட்டுவதை விட அதிகமாக, பரவலாகத் தாழ்த்தப் பட்டோரை வாட்டுகிறது. எனவே தாழ்த்தப் பட்டோர் அனைவரும், சாதியொழிப்புத் தேனில், சமதர்ம கார மாத்திரையை இழைத்துச் சாப்பிட முன் வர வேண்டும்.

தொழிற்சாலை போன அய்யர், பண்ணையிழந்த பிள்ளை, நாயக்கர், முதலியார், பல்லிழந்த பாம்பின் நிலைக்கு ஆளாவார்கள். அவர்களின் சாதி நஞ்சு வலிவிழந்து விடும். பழக்கக் கொடுமையால், சிறிது காலம் மிரட்டலாம்; நாமும் மிரளலாம். ஆனால், நெடுநாளைக்குச் செல்லாது. எனவே, பிறவித் தொழிலாளிகளான தாழ்த்தப்பட்ட உடன் பிறப்புகளே, மான உணர்வும், பொது உடைமை உணர்வும் வளர்ப்பதில் முனைப்பாகயிருத்தல் நல்லது. நிற்க.

ஆதிக்கவாதிகளின் குறும்பு நீடித்தது. மன்னார்குடியில் ஒருவரைக் கொண்டு, புரட்சியின் ஆசிரியரான தோழர் ஈ.வெ.கிருஷ்ணசாமி மீது மான இழப்பு வழக்கு தொடரப்பட்டது. பெரியவர் 2-6-34 இல் ஈரோட்டில் கைது செய்யப்பட்டார். அவர் காப்புப் பணம் கட்டி விட்டு வெளியே வந்து, எதிர் வழக்காடினார். இறுதியில் வழக்கு தள்ளுபடிச் செய்யப்பட்டது?

வெளியிடுவோராகிய கண்ணம்மாவைச் சும்மா விட்டார்களா? ஆசிரியர் பெயர் இல்லாது வெளியிட்டதற்காக வழக்குத் தொடுத்து, ரூபாய் 100 அபராதம் விதித்தனர்.

இதற்கிடையில், சிறையிலிருந்து ஈ.வெ. ராமசாமி விடுதலை ஆனார், சமதர்மப் பணியைத் தொடர்ந்தார்.

கோவை மாவட்ட திருப்பூரில் 1934ஆம் ஆண்டு, மே திங்கள் 20, 21 நாள்களில் செங்குந்தர் 12 ஆவது மாநாடும்,செங்குந்த வாலிபர் 2 ஆவது மாநாடும் நடந்தன. வாலிபர் மாநாட்டிற்குத் திரு. கா.ந. அண்ணாதுரை (அறிஞர் அண்ணா) தலைமை தாங்கினார்.

தந்தை பெரியார் அம்மாநாடுகளில் கலந்து கொண்டார். அப்போதுதான் அண்ணா பெரியாருக்கு அறிமுகம் ஆனார்.

பெரியார் அப்போது, ‘சமதர்மம்’ பற்றி உரையாற்றினார். அவ்வுரையின் நடுவே,

‘இன்று ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆளுக்கொரு வேலை செய்து, சமமாக உண்டு, உடுத்திக் களிப்புடன் வாழ்க்கை நடத்துவதில்லையா? அது போலவே, ஒரு கிராமம், ஒரு ஜில்லா, ஒரு மாகாணம் அல்லது நாட்டிலுள்ள சகல மக்களும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் போல, வாழ முடியாதா? நாட்டில் உள்ள சொத்துக்களைத் தனித் தனியாக அவனவன் விருப்பம் போல் அனுபவிக்கும் தனியுரிமை, யாருக்கும் இல்லை’ என்று விளக்கினார்.

கஷ்டப்பட்டு உழைக்காது, சுக வாழ்வு வாழ்வதும், தேவைகளுக்கு மேற்பட்ட சொத்துக்களுக்குச் சொந்தக்காரனாக இருப்பதும் ஒரு கௌரவம் என்றும், கண்ணியமானது என்றும் கருதுவது ஒரு மூட நம்பிக்கையே தவிர வேறில்லை.’ என்று பெரியார் இடித்துரைத்தார்.

தனியுடமையால் பணம் பாழாவதைச் சுட்டிக் காட்டுவதைப் பாருங்கள்.

‘மனிதனுக்கு மூன்று அல்லது நான்கு மணி நேரம் மோட்டார் வேண்டியிருக்கும். இதற்காக இருபது மணி நேரம் யாருக்கும் பயனின்றி இருக்கிறது. இதில் வீணாகப் பணம் முடங்கிக் கிடக்கிறது’ என்றார்.

3-6-34 நாளைய புரட்சியில் வெளியான ஒரு கட்டுரையின் சிறு பகுதியைப் படியுங்கள்.

‘இலவசமாக வீசும் பிராண வாயு, கோடீசுவரன் நுரையீரல்களில் நுழைகிறதே, அப்பரிசுத்த வாயுவே, ஏழையின் தேகத்திலும் பட்டு சுகத்தை உண்டாக்குகிறது. முதலாளித் தத்துவம், காற்றைத் தமக்கு என்று ஏராளமாகச் சேமித்து வைத்து, ஏழைக்குச் சிறிதளவே கொடுத்து உதவும்படித் திட்டம் வகுக்கக் காணோம். காற்றுக்குத் தடையில்லாத போது, மற்றவைகளுக்குத் தடைகளும், விதிகளும் இருப்பானேன்?’ இக்கேள்வி பொருத்தமானதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/18&oldid=1690664" இலிருந்து மீள்விக்கப்பட்டது