உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாரும் சமதர்மமும்/23

விக்கிமூலம் இலிருந்து

23. இந்தி எதிர்ப்பு முதன்மை பெற்றது

ஆயிரம் ஆண்டுகளாகக், கல்வியின்மேல் நாட்டம் இல்லாதிருந்த தமிழர்களிடையே, நீதிக் கட்சியின் தொண்டும், தன்மான இயக்கப் பணியும் ஓரளவு—பெருமளவல்ல—படிப்பார்வத்தைத் தூண்டின. உயர் நிலைப் பள்ளிகள் நெடுந்தொலைவில் இருந்த காலம் அது. அப்பள்ளிகளின் அருகில் இருந்த சில பார்ப்பனரல்லாத குடும்பங்களாவது பிள்ளைகளை, அய்ந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்க வைக்க முன் வந்தார்கள். அதுவே, தங்களுக்குக் கடும் போட்டியாக வருமென்று கால காலமாகக் கல்வி பெறுவோர் அஞ்சினர்.

ஒரே நேரத்தில், இரு புது மொழிகளை ஆறாம் வகுப்பில் புகுத்தி, இரண்டிலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால்தான், ஏழாவது வகுப்பிற்குப் போகலாம் என்று ஆணையிடுவது கல்வியைத் தேடி வரும் புதிய தலை முறையை மட்டம் தட்டி அனுப்புவதாகும் என்று பொது மக்கள் கருதினார்கள். அக்கருத்து கற்பனையென்று ஒதுக்கி விடுவதற்கு இல்லை.

கட்டாய இந்தியைக் கொண்டு வந்தது, சமதர்மக் கொள்கைப் பரப்புதலைத் திசை திருப்பும். ஆயினும், அது பொதுமக்களின், பொதுக் கல்வியின் தலையில் மண்ணை வாரிக் கொட்டும் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை. குறிப்பாகத் தமிழ் மக்கள், பெரிதும் பாதிக்கப்படுவார்கள். ஏன்?

தமிழ் மொழியின் எழுத்து, இந்தி எழுத்துக்கு மாறானது. ஆறாம் வகுப்புப் படிக்கும் தமிழ்க் குழந்தை, தமிழ் எழுத்து, ஆங்கில எழுத்து, இந்தி எழுத்து ஆகிய மூன்றையும் சமாளிக்க வேண்டும். மூவகை இலக்கணங்களைக் கற்றுத் தேர்ச்சி பெற வேண்டும்.

முந்தைய தலைமுறை வரை எழுத்தறிவு பெறாதவர்களுக்கு இதைச் சமாளிக்க முடியாது. இதை உணர்ந்த பொதுமக்கள் கொதிப்படைந்தார்கள். நெடுங் காலமாகத் தமிழ்நாட்டுப் பொது மக்களின் நலன்களைக் கவனிக்கும் பெரிய அமைப்பு கிடையாது. 1917இல் நீதிக்கட்சி தோன்றிய பிறகு, அந்த அமைப்பு பார்ப்பனரல்லாதாரின் குரலாகச் செயல்பட்டது. பொது மக்களிடம் சிறிதளவு விழிப்பையும் ஊட்டியது.

1937இல் நடந்த பொதுத் தேர்தலில், நீதிக் கட்சி படு தோல்வி அடைந்ததால், அக்கட்சி கட்டாய இந்தியை எதிர்த்து தனியாகப் போராடும் நிலையை இழந்து விட்டது. மக்களறிந்த தலைவரோ, இயக்கமோ, கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடங்கினால், அவருக்கோ, அந்த அமைப்புக்கோ, ஆதரவாக நிற்கும் நிலையில் மட்டுமே நீதிக் கட்சி இருந்தது.

தமிழ் கற்றோரும், தமிழ் கற்பிப்போரும் கட்டாய இந்தியால், தமிழர் கல்வி வளர்ச்சி பாதிக்கப்படுவதைப் போலவே, தமிழும் தன்னிலை இழக்கும் என்று அஞ்சினார்கள். ஆங்கில ஆதிக்கத்தால், அக்காலத் தமிழில் வடுவாகத் தோன்றுமளவு ஆங்கிலச் சொற்கள் நிறையக் கலந்து இருந்தன.

முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே, மணிப் பிரவாள நடையில் தமிழ் சிதைய, அதைச் செப்பனிட பெருமுயற்சி தேவைப்பட்டதை, அவர்கள் நினைவு கூர்ந்தார்கள். புதிய இந்தி மொழியைப் பச்சிளம் பருவத்தில் கற்பதால் வரும் தலை முறைத் தமிழர்கள், கால் பங்கு தமிழ்ச் சொற்களையும், முக்கால் பங்கு பிற மொழிச் சொற்களையும் கையாளுவார்கள் என்று கருதினர். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றாகிய தமிழ், வரம்பின்றி பிற மொழிச் சொற்களைக் கடனாகப் பெறுவது, அதன் உயிர் ஊக்கத்தைக் கெடுக்கும்; இயல்பைச் சிதைத்து விடும். இப்படி அறிஞர்கள் கருதினார்கள்.

அறிஞர்கள், தமிழ் மொழியைக் காக்கும் பொருட்டு, கட்டாய இந்தியை எதிர்த்தார்கள். கட்டாய இந்தித் திட்டம், தவறான நிலையில் திணிக்கப்படுவதால், தொடர்ந்து படிக்க வழி செய்யாததால், தங்கள் மக்களின் சாதாரணக் கல்வியும் கத்தரிக்கப்படுமென்று பெற்றோர்கள் எதிர்த்தார்கள்.

வெவ்வேறு காரணங்களுக்காக, வெவ்வேறு பிரிவினர் கட்டாய இந்திப் பாடத்தை எதிர்த்தாலும், அந்த எதிர்ப்புப் பரவலாக இருந்தது. அவ்வுணர்ச்சி தமிழ்க் கழகங்களின் சார்பில் கண்டன முடிவுகளாக வெளிப்பட்டது. மாநாடுகள் வழியாகப் புலப்பட்டது.

கட்டாய இந்திப் பாடம் கட்சித் திட்டம் அல்லவாயினும், கட்சியின் ஆட்சி அப்படியொரு முடிவை அறிவித்த பிறகு, அதை எப்படியும் ஆதரித்தாக வேண்டும் என்ற நிலையில் காங்கிரசு கட்சியினர் இருந்தனர்.

ஒரு வலிமை மிக்க கட்சியின், ஆட்சியைப் பிடித்துள்ள பெருங்கட்சியின், தீங்கான முடிவை முறியடிக்க பெரும் போராட்டம் தேவை என்பது பலருக்கும் புரிந்தது. அப்போராட்டத்தில் சிறை செல்லல் போன்ற தொல்லைகளைச் சமாளிக்க நேரிடலாமென்பதும் தெளிவாயிற்று. காங்கிரசைப் போன்ற கட்டுப்பாடான இயக்கம் ஒன்றே, கட்டாய இந்திப் பாடத்தைத் தடுத்து நிறுத்த இயலும் என்பதும் வெட்ட வெளிச்சமாயிற்று.

தமிழ் நாட்டின் நன்மைக்கும், தமிழர் உரிமைக்கும் தந்தை பெரியாரும், அவரது தன்மான இயக்கமும் போராடும் அளவிற்கு, வேறெந்த தலைவரோ, இயக்கமோ போராட முடியாது என்பது நாடறிந்த உண்மை. இராசகோபாலாச்சாரியாருக்கு ஈடு கொடுத்துப் போராடக் கூடியவர், பெரியாரைத் தவிர எவரும் இல்லை. பெரியாரின் இயக்கம் ஈர்க்குமளவு, பிற இயக்கங்கள் போராட்டத் தொண்டர்களை ஈர்க்க இயலாது என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.

கண்டன மாநாடுகள், பொதுக் கூட்டங்கள் முதலியவற்றின் உணர்வுகளை, அன்றைய ஆட்சி பொருட்படுத்தவே இல்லை. போராட்டம் ஒன்றே, கட்டாய இந்திப் படிப்பைத் தடுக்கும் என்பது பொது முடிவு. அப்போராட்டத்தை முன்னின்று நடத்த வேறு எவரும், எந்த அமைப்பும் போதிய வலிவோடு முன் வராமையால், தந்தை பெரியார் அப்பொறுப்பினை ஏற்றார். கட்டாய இந்தி எதிர்ப்பு, தன்மான இயக்கத்தின் உடனடிப் பணியாகி விட்டது.

போதிய அறிவிப்பு கொடுத்து விட்டு, சென்னை, தங்க சாலை தெருவில் உள்ள இந்து தியலாஜிகல் உயர்நிலைப் பள்ளியின் முன்பு, நாள் தோறும் அடையாள மறியல் செய்வது, கட்டாய இந்தி எதிர்ப்பு முறையாக, முடிவு செய்யப்பட்டது.

இதில் ஒன்றைச் சிறப்பாகக் கவனிக்க வேண்டும். அது என்ன? குறிப்பிட்ட நாளில், தமிழ்நாடு முழுவதும் கிளர்ச்சி என்று திட்டமிடவில்லை. பெரியாரின் எல்லாக் கிளர்ச்சிகளுமே, வன்முறைக்கு வழி செய்யாத முறையிலும், பொதுமக்களின் அன்றாட வேலைகளுக்கு இடையூறாக இல்லாத தன்மையிலுமே, ஏற்பாடு செய்யப்படும்.

அம்முறையில், ஒரே ஊரில், ஒரே பள்ளியின் முன்பு மட்டும் மறியல். அதுவும் பள்ளிக்குப் போவோரைத் தடுக்கும் வகையில் அல்ல. ‘கட்டாய இந்தி ஒழிக’ என்று முழக்கம் இடுவதன் வாயிலாகப் பொதுமக்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு, நிற்பது. அப்படி எழுப்பும் முழக்கமும், நாள் முழுவதும் அல்ல; சில மணித்துளிகளே நடக்கும். இத்தனையும் இணைந்ததே, கட்டாய இந்தி மறியல் திட்டம்.

அத்தகைய மறியலில் ஈடுபட்டோரைக் கைது செய்யாமல் விட்டிருந்தால், போராட்டம் சூடு பிடித்திருக்காது. அரசு நிலைமையை எளிதில் சமாளித்திருக்கலாம். அது அன்றைய முதல் அமைச்சர் இராசகோபாலச்சாரியாருக்குப் புரியாதது அல்ல. அவர் விரும்பியதோ சூடு பிடிக்கும் கிளர்ச்சி. அப்படிச் சூடு பிடித்தால், எங்கும் இது பற்றியே பேச்சாகி விடும். ஆதரிப்போர் ஆதரிக்கட்டும். எதிர்ப்போர் எதிர்க்கட்டும். எப்படியானாலும் பேச்சு அது பற்றியே சுழன்றால், சமதர்மப் பேச்சு பெருமளவு குறைந்து விடும். நின்றாலும், நின்று விடும் என்று அவர் மதிப்பிட்டார். ஆகவே, மறியல் செய்தவர்களைக் கைது செய்து, வழக்குத் தொடர்ந்து, தண்டனை பெற்றுத் தர அவர் ஆணையிட்டார்.

அப்பள்ளிக்கூடம் நடக்கும் ஒவ்வொரு நாளும், எதிரில் முழக்கமிட்ட நான்கு தொண்டர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்னும் செய்தி வந்தன. அடுத்துக் கடுந்தண்டனைச் செய்தி தொடர்ந்து வெளியாயின. ஆங்காங்கே இது பற்றியே பேச்சாயிருந்தது. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சிறைப்பட்டார்கள். பச்சைக் குழந்தைகளோடு, தாய்மார்கள் சிறை சென்றார்கள். தந்தை பெரியார், ஈராண்டுக் கடுங்காவல் தண்டனை பெற்றார்.

செல்வத்திலே பிறந்து, செல்வத்திலே வளர்ந்த பெரியாருக்கா, அறுபது வயதினரான ஈ.வெ. ராமசாமிக்கா, இத்தகைய கடுந்தண்டனை என்று தமிழ்த் தென்றல் திரு. வி.கல்யாணசுந்தரனார் கல்லும் கரையும் வகையில், கண்டித்து எழுதினார். டாக்டர் வரதராசுலுவும் அப்படியே கண்டித்தார். பலரும் கண்டித்தனர். பல இதழ்களும் கண்டித்தன.

இத்தனையும், மறு சிந்தனையைத் தூண்டவில்லை. எதிர்பார்த்தபடித் திசை திருப்பம் நடப்பதைக் கண்டு, அன்றைய ஆட்சி முதல்வர் மன நிறைவு கொண்டிருப்பார். அதை வெளிப்படுத்தாமல் சமாளித்தார்.

ஈராண்டுகள் போல் நீடித்த கட்டாய இந்தி எதிர்ப்புப் போரில், தாலமுத்து, நடராசன் என்ற இரு இளந்தொண்டர்கள் சிறையில் உயிர் நீத்தார்கள். அதுவும் மக்கள் சுவனத்தை சமதர்மத்திலிருந்து, மொழி ஆதிக்கத் தீங்கின் மேல் திருப்பி விட்டது.

ஆங்கில ஆட்சியின் அடக்கு முறையை விட, நம்மவர் ஆட்சியின் சூழ்ச்சியே, சமதர்மக் கோட்பாட்டைப் பரப்பும் பணியைப் பின்னுக்குத் தள்ளி விட்டது.

சென்னை தியாலாஜிகல் உயர் நிலைப் பள்ளியின் முன், கட்டாய இந்திப் பாடத்தை எதிர்த்து முழக்கமிட்ட அடையாளப் போராட்டம், ஏறத்தாழ ஈராண்டுகள் போல் நீடித்தது. முதல் ஆண்டிலேயே, சட்ட மீறலைத் தூண்டி விட்டார் என்று குற்றஞ் சாட்டித் தந்தை பெரியாருக்கு ஈராண்டுத் தண்டனை வாங்கித் தந்தது இராசகோபாலாச்சாரியாரின் ஆட்சி.

பெல்லாரி சிறையில் அடைபட்டிருந்த பெரியார், கடுமையான நோய்க்கு ஆளானார். அவர் எடை பெருமளவு குறைந்து விட்டது. சிறை அலுவலர் அரசுக்கு அறிவித்தார். அரசு என்ன செய்தது?

அப்போது, சென்னை அரசின் முதல் மருத்துவராகப் பணி புரிந்து வந்த டாக்டர் குருசாமியை (முதலியாரை) அனுப்பி, மருத்துவ சோதனை செய்ய வைத்தது. மருத்துவர் அரசு வெகுளுமே என்று அஞ்சாமல், உள்ளது உள்ளபடி அறிக்கை கொடுத்தார்.

தந்தை பெரியாரின் உயிர் ஊசலாடியதை அரசு அறிந்து கொண்டது. அவரை மேலும் சிறையில் வைத்திருந்தால், பெரியாரின் உயிருக்கு ஊறு நேரலாமென்று அரசு அஞ்சியது. அத்தகைய பழிக்கும், அதனால் விளையக் கூடிய பகைக்கும் ஆளாக அரசு விரும்பவில்லை. எனவே, தண்டனைக் காலம் முடிவதற்குள், பெரியாரைத் திடீரென விடுதலை செய்தது. அது நல்ல விவேகமான ஆணை என்பதில் அய்யம் இல்லை.

பெரியார் என்னும் தனிப்பட்ட தலைவரிடம் காட்டிய அந்த விவேக அணுகு முறையைப் பொதுமக்களைப் பாதிக்கும் கட்டாய இந்திப் பாட முறையில், கையாளவில்லை. முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை என்று அரசு அடம் பிடித்தது. ஆக்கப் பணிகளுக்குப் பயன்படுத்தியிருக்க வேண்டிய ஆட்சி வாய்ப்பை, வம்பை வளர்ப்பதற்குப் பயன்படுத்தினார், முதல்வர் இராசகோபாலாச்சாரியார். இருபத்தேழு ஆண்டுகளுக்குப்,பிறகு, அவரே, இந்தி ஆட்சி மொழிக்கு எதிரான கிளர்ச்சிக்குத் தூபம் போட்டதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.

சென்னை மாநிலப் பிரதமராக இருந்த போது, சின்னஞ்சிறு வயதினருக்கு மட்டும் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியது இந்தியாவின் ஒருமைப் பாட்டை வளர்க்க என்று தம்பட்டம் அடித்தார்; மற்றவர்களைக் கொண்டும் அடிக்க செய்தார். ஆனால், இந்தி மட்டுமே ஆட்சி மொழியாகும் நிலை, நெருங்கிய போது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தார். இம்முரண்பாடுகளை எப்படி விளக்குவது?

முன்னே ஆர்வத்தில்—முன்னோடியாக விளங்க வேண்டுமென்னும் துடிப்பில், இந்தி பாடத்தைக் கட்டாயமாக்கினார். கால் நூற்றாண்டுக்குப் பிறகு, முதிர்ச்சியின் தெளிவால், இந்தியின் தனியாட்சியில் உள்ள தீங்கினை உணர்ந்தார் என்று விளக்கலாமா? அது இராசகோபாலாச்சாரியாரின் மதி நுட்பத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.

கட்டாய இந்தியைப் படிக்க முயன்றால், பொதுமக்களின் குழந்தைகள் தேர்ச்சி பெற மாட்டார்கள். கல்விப் போட்டிக்கு வராமல், குலத் தொழில் செய்யப் போய் விடுவார்கள்; படிக்க மறுத்தால், தமிழர்கட்கும், வடஇந்தியர்களுக்குமிடையே கடுமையான கசப்பு ஏற்பட்டு விடும் என்று இராஜாஜி கணக்குப் போட்டிருக்க வேண்டும்.

சமதர்மவாதிகள், மொழிச் சிக்கல் பற்றி ஒன்று படாமல் பிரிந்து, காழ்ப்புணர்ச்சி கொண்டு, நின்றால், சமதர்மக் கொள்கை விரைந்து பரவாது என்று அந்த அறிவாளி நினைத்திருக்க வேண்டும். வரலாற்று நிகழ்ச்சிகள், அத்தகைய கோடுகளையே காட்டுகின்றன.

கட்டாய இந்தி எதிர்ப்புப்போர் என்னும் திசை திருப்ப நெரிசலில், பெரியாரும், அவருடைய இயக்கமும் சிக்காமல் இருந்தால், பெரியார் பகுத்தறிவு இயக்கத்தையும், சமதர்ம இயக்கத்தையும், தமிழ்நாட்டிற்கு அப்பாற்பட்ட மாநிலங்களிலும், பெருமளவு பரப்பியிருப்பார்.

ஜெயப்பிரகாச நாராயண் அவர்களின் அழைப்பை ஏற்றுச் செயல்பட்டிருந்தால், அனைத்திந்திய சமதர்ம இயக்கத்தோடு, தமிழ் நாட்டின் தன்மான இயக்கம் கலக்காமல் போனாலும், தனித்து நின்று செயல்பட்டிருந்தாலும், இந்தி பேசும் மாநில மக்களிடம் பெரியார் கொள்கை, அடிக்கடியும், விரிவாகவும் பரவ வாய்ப்புகள் வளர்ந்திருக்கும். பெரியார் ஆண்டிற்கொரு முறையாகிலும், வடமாநிலங்களில் பகுத்தறிவு மழை பொழியவும், சமதர்மக் கோட்பாட்டினைப் பயிரிடவும் வாய்ப்புகள் வந்திருக்கும்.

இந்தியாவிலுள்ள சமதர்மவாதிகளும், பகுத்தறிவாளர்களும், உள்ளத்தால் இரண்டறக் கலக்காமல், உதட்டளவே நட்புக் கொள்ள நேர்ந்தது. எதற்கும் பயனில்லாத, தேவையற்ற மன வேற்றுமையையும், பிரிவினையும் வளர்த்து விட்ட பத்துப் பன்னிரெண்டு வயதினருக்குக் கட்டாய இந்தி பாட முறை போல்தான்.

இப்படி விளையும் என்பதை மற்றவர்களை விடத் துல்லியயாக உணர்ந்தது, இராஜாஜியின் கூர்மையான மதி. எனவே, தேவையற்ற திட்டத்தைக் கட்டாயப்படுத்தினார்; அடம் பிடித்தார்; மானப் பிரச்சினை ஆக்கி விட்டார்.

தாய் மொழியிழந்து, ஊமையராகி விடுவோமென்ற அச்சத்தில், தமிழ் மக்கள் போர்க் களத்திற்குத் தள்ளப்பட்டார்கள். அன்று, இத்தகைய சமுதாயப் போராட்டத்திற்குப் பொறுப்பேற்கும் நிலையில் இருந்த ஒரே கட்சியாகிய, தன்மான இயக்கம் போராட்டத்தில் குதித்தது.

இதற்கிடையில், 1939 செப்டம்பரில் இரண்டாம் உலகப் போர் மூண்டது. ‘செர்மானிய மக்கள் ஆரிய இனத்தவர்; ஆளப் பிறந்த இனத்தவர்’ என்னும் அகந்தை வெறியை ஊட்டி ஊட்டி, இட்லர், செர்மானியரை உலகப் போரில் தள்ளினான், இட்லரின் கூட்டாளிகள், இத்தாலிய முசோலினியும் சப்பானிய டோஜோவும் ஆவர்.

இம்மூவருமாகச் சேர்ந்து பிரிட்டன், பிரான்சு முதலிய நாடுகளைத் தோற்கடித்தல், அவற்றிடம் சிக்கி உள்ள அந்நிய நாடுகளை தாங்கள் பங்கு போட்டுக் கொண்டு ஆளுதல், இவ்விரு குறிக்கோள்களோடு, இவர்கள் இரண்டாம் உலகப் போரில் குதித்தார்கள்.

பிரிட்டன் போர் அறிவிப்பு செய்ய வேண்டியதாயிற்று. தனது ஆளுகையில் இருந்த இந்தியாவும், தன் பக்கம் நின்று போராடுமென அறிவிக்கப்பட்டது. அப்படி அறிவிப்பதற்கு முன்பு, பல மாநிலங்களில் இயங்கி வந்த காங்கிரசு அமைச்சரவைகளைக் கலந்தாலோசிக்கவில்லை; இந்தியக் காங்கிரசுத் தலைவர்களையும் கலந்து பேசவில்லை. இவற்றைச் சாக்காகச் சொல்லி, காங்கிரசு அமைச்சரவைகள் பதவிகளை விட்டு விலகின.

பிரதமர் இராசகோபாலாச்சாரியாரும், அவரது அமைச்சரவையும் விலகியது; ஆங்கிலேயரின் பேராதரவு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பதில்லை என்று அனைத்து இந்திய காங்கிரசு முடிவு செய்தது. எனவே, ஆங்கில ஆட்சி, மற்ற கட்சிகளின் ஆதரவை அதிகமாக நாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்நெருக்கடி, தமிழர்களுக்கு நன்மையாயிற்று.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவை விலகிய சில திங்களில், கட்டாய இந்திப் பாடம் எடுக்கப்பட்டது.

ஆனால் போர்க் காலமானதால், போருக்கு அப்பாலான சமதர்மக் கொள்கைப் பரப்பிற்கு முன்னரே விதிக்கப்பட்ட தடை எடுபடவில்லை; அத்தடை தொடர்ந்தது. இப்படி, உலகப் போர், சமதர்மக் கொள்கைப் பரப்புதலை தடுத்து நிறுத்தி வைத்தது.

ஆங்கில ஆட்சி முறையின் அடக்கு முறையால் நின்ற சமதர்ம இயக்கம், கட்டாய இந்திப் பாட முறையால் மூழ்கிப் போன சமதர்ம இளம் பயிர்—போர் நெருப்பால் பொசுங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பெரியாரும்_சமதர்மமும்/23&oldid=1690986" இலிருந்து மீள்விக்கப்பட்டது