உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆண்மை

11

டிருந்ததை எல்லாம் ருக்மிணி வந்து அவனிடம் சொல்லியழுதாள்.

அவளுக்குச் சீமாவின் தகப்பனாரை எப்படிப் பேசலாம் என்ற வருத்தம். குழந்தையுள்ளத்தில், தன் இரகசியத்தைச் சீமாவிடம், அவன் அங்கு சென்றிருக்கும் பொழுது, சொல்லி விட்டாள். அதிலிருந்து ருக்மிணி என்றால், சீமாவிற்குத் தனது உள்ளம் என்ற ஒரு பற்றுதல். ஆனால், மாமாவின் மீதும், அத்தையின் மீதும் அடங்காத கோபம். அந்தக் கோபத்தில் ஏற்பட்ட வெறுப்பின் சாயை, சீமாவின் மனவுலகத்தில், ருக்மிணியைத் தீண்டியதும் உண்டு.

ருக்மிணி புஷ்பவதியானாள்.

சடங்குகளும் ஏக தடபுடலாக நடந்தன. ஆத்தூர்ப் பண்ணை ஐயர் நேரில் வந்து அழைத்தும், அங்கிருந்து ஒருவரும் போகவில்லை.

ருக்மிணிக்கு மிகுந்த வருத்தம். தன் சீமா வராமல் இருப்பாரா என்று ஏங்கினாள். ஆத்தூர் ஐயரும், குழந்தை ருக்மிணிக்குச் சாந்தி முகூர்த்தம் செய்விக்க ஒரு நல்ல தினத்தைப் பார்த்து, பரமேச்வர ஐயருக்கு ஒரு கடிதம் எழுதினார்.

பரமேச்வர ஐயருக்கு இந்தக் கடிதத்தைக் கண்டதும், உள்ளம் ஆனந்தக் கூத்தாடியது. தான் நெடுநாள் எதிர் பார்த்திருந்த தினம் வந்த உத்ஸாகத்தில், அன்று விருந்து நடத்தினார். பிறகு சம்பந்திக்கு ஒரு நீண்ட கடிதம், ஏறக் குறையக் குற்றப் பத்திரம் ஒன்று எழுதி, அதில் 5000 ரூபாய் கையில் தந்தால்தான், தன் மகன் சாந்தி முகூர்த்தம் செய்வான் என்றும், மேலும் சம்பந்தி ஐயரவர்களின் சீர் வரிசைக் குறைகளை எல்லாம், இப்பொழுது சரிகட்டி மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் எழுதி இருந்தார்.

இந்த விஷயத்தில் சீமாவிற்கு மனத்தாங்கல்தான்; இவ்வளவிற்கும், ருக்மிணி பாபம் என்ன செய்தாள் என்று நினைத்தான். ஆனால், தகப்பனாருக்கு அடங்கிய பிள்ளை. சொல்லவும் முடியவில்லை; மெல்லவும் முடியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/12&oldid=1694188" இலிருந்து மீள்விக்கப்பட்டது