உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருளிமலை 1 வழக்கம்போலவே வேப்பமரத்து மேடையிலமர்ந்து புல் லாங்குழல் ஊதிக்கொண்டிருந்தான் சுருளிமலை காலை நேரங்களில் அந்தமேடைஅவனுக்கு மட்டுமே சொந்தம். மாலை நேரத்தில் ஊராருக்கு அதுவே காற்று வாங்குமிடமும், பொழுது போக்குமிடமும், ஊர்வம்பு பேசு மிடமுமாகும். இன்றியமையாத சமயங்களில் அந்த மேடையில் தான் ஊர்ப் பஞ்சாயத்து நடைபெறும். ஆண்டுக்கொரு முறை நடைபெறும் அம்பு போடும் உற்சவத்தின்போது குதிரை வாகனத்தின் மீது சாமியை அலங்கரித்து அங்கே தான் கொண்டுவந்து இறக்கி பூஜைகள் நடத்துவார்கள். இப்படி ஊருக்கு மிக சிறப்பான வேப்ப மரத்தடியில் காலை நேரப் பொழுதை சுருளிமலை கழித்து வந்தான். செழித்து வளர்ந்த அந்த வேம்பு, ஒரு விதவை! ஆமாம்; திருமண மான அடுத்த இரண்டொரு நாட்களிலேயே வேம்பின் கணவன் அரசு, பட்டுப் போய்விட்டான் ! அரசில்லாத வேம்பு, தன்னந்தனியாக வளர்ந்து சுருளிமலையின் குழலோசையைத் தினந்தோறும் சுவைத்துக் கொண்டிருந்தது. அதன் உட லிலும், கிளையிலும், இலையிலும், காயிலும், பூவிலுமுள்ள கசப்பு கூட மறைந்து போயிருக்கும் எனக் கற்பனை செய்தால் அது மிகையாகாது; அவ்வளவு இனிப்பான இசையை அது பருகி யிருக்கிறது! மரம், செடிகள் சுவாசிக்கின்றன என்பதைக் கண்டு பிடித்தான பிறகு, அவைகள் ஒலியைக் கேட்கவும் செய்கின்றன வென்று யாராவது ஒருவன் ஆராய்ச்சி முடிவை அறிவிக்காமலா இருக்கப் போகிறான்-என்ற எண்ணத்தாலோ என்னவோ-சுருளிமலை, வேம்படியில் வேய்குழலில் தன்னை மறந்து மூழ்கிவிடுவான். இசைவாணர்கள், குழலோர் இசைக் கென அமைத்துக் கொண்ட இலக்கணம் பற்றிய அரிச்சு வடியே அவனுக்குத் தெரியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/14&oldid=1694878" இலிருந்து மீள்விக்கப்பட்டது