உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/இன்று போல் என்றும் இரும்!

விக்கிமூலம் இலிருந்து

30. இன்றுபோல் என்றும் இரும்!

திருமண வீடுகளிலே மணமக்களை வாழ்த்துபவர்கள், 'இன்றுபோல் என்றும் இருப்பீர்களாக' என்று கூறுவார்கள்.புதிய மணமக்களிடையே அளவற்ற ஆர்வமும், ஈடுபாடும் நிலவும். அவை காலம் கழிய, உருவத்திலே முதுமை படியப்படியக் குறைந்து போவதும் ஏற்படலாம். அங்ஙனம் குறைதல் ஆகாது. உருவ எழிலால் மாறுபட்டாலும் உள்ளத்தால் என்றும் ஒருவரேயாக அவர்கள் வாழ்தல் வேண்டும். அதுதான் தலைசிறந்த இல்லற வாழ்வாகும்.

அங்ஙனம் வாழுமாறு, பாரியின் பெண்களை மணந்து கொண்ட இளைஞர்களை ஔவையார் வாழ்த்துகின்றார். மணப்பெண்களை வாழ்த்தாமல், மணப் பிள்ளைகளைத்தான் வாழ்த்துகின்றார். இதிலும் நியாயம் இருக்கிறது.

தன்னை நேசித்து மணந்துகொண்ட மணாளனிடம் பெண் கொள்ளுகின்ற காதல் என்றும் நிலையானது. அதன் உறுதியை முதுமையும் பிற ஏதும் தளரச் செய்துவிட இயலாது. ஆனால் ஆணின் நிலைமை வேறு. அவன் அழகுக் கவர்ச்சியை நாடிப் பிற மாதரையோ அல்லது பரத்தையரையோ தேடுதல் கூடும். இதுபற்றியே ஔவையார் உலகியலை நன்றாக அறிந்தவராதலினால், அந்த மணப் பிள்ளைகளை வாழ்த்தி, அறிவுரையும் கூறுகின்றார்.

ஆயன் பதியில் அரன்பதிவந் துற்றளகம்
மாயனு துங்கருவி யானாலும் - தூயமணிக்
குன்றுபோல் வீறு குவிமுலையார் தம்முடனீர்
இன்றுபோல் என்றும் இரும்.

“அரச குமாரர்களே! உங்கள் மனைவியாரின், திருமால் தங்குமிடமான ஆலிலை போன்ற வயிற்றில், அரன் வாழிடமான குன்றினைப் போன்ற சூலானது வந்து அடைந்தாலும், அவர்களின் கூந்தலானது மாயவனுதும் பாஞ்சசன்னியம் என்னும் சங்கினைப் போன்று வெண்மை அடைந்தாலும் அவர்களைக் கைவிட்டுப் பிரியாதீர். குற்றமற்ற மணிக்குன்று போல வீறுபெற்றுக் குவிந்துள்ள கொங்கைகளை உடைய இவர்களுடன் நீர் இன்று இன்புற்று இருப்பது போலவே என்றும் இருப்பீராக” என்பது பொருள்.

இவ்வாறு அறிவுரை சில கூறிய பின்னர், தம் கடமையை நிறைவேற்றிய மனநிறைவுடன், ஔவையார் பிரியாவிடை பெற்றுச் சென்றார். திருமணத்திற்கு வந்திருந்த மூவேந்தரும் பிறரும் தத்தம் நாடுகட்குத் திரும்புகின்றனர்.

இந்தப் பாக்கள் அனைத்தும் சங்ககாலச் செறிவுடன் தோன்றவில்லை. எனவே, இவற்றைப் பிற்பட்ட ஔவையார் பாடியதாகவும் கொள்வார்கள். அந்தக் கொள்கைக்குத் தக்கபடி அவர்கள் 'பாரிமகளிர்' என்பதற்கு வேறு ஒரு விளக்கமும் தருவார்கள்.

‘மலையமானின் திருக்கோவலூர்க்கு அருகாமையில் 'பாரி' என்னும் ஓர் ஆட்டு இடையன் இருந்தான். அவனுக்கு அங்கவை சங்கவை என்னும் இரு பெண் மக்கள் இருந்தனர். அவர்களைக் குறித்து எழுத்தவையே இந்தப் பாடலின் நிகழ்ச்சிகள்' என்பார்கள் அவர்கள்.

இந்தப் புதிய கதையிலும் ஐயப்பாடுகள் இல்லாமல் இல்லை. இடையனின் மக்களைத் தெய்வீகன் ஆகியவர் மணந்துகொள்வதும், மூவேந்தர் வந்து கலந்து கொள்வதும் பொருத்தமாக இல்லை.

இதனால், நாம் பாட்டிற்கு ஏற்பவே நிகழ்ச்சிகளை உருவாக்கிக் கொள்வதுடன் அமைதியடைய வேண்டியவர்கள் ஆகின்றோம். காலக்கணக்கை ஆராய்ச்சிப் பற்றாளர்கள் கவனிக்கட்டும்.