ஔவையார் தனிப்பாடல்கள்/நன்று எது?
34. நன்று எது?
அங்கிருந்த ஔவையார், “ஏசிக்கொண்டே கொடுப்பதை காட்டினும் அவன் ஏதும் கொடுக்காமல் இருந்து விடுவதே உத்தமம்" என்றனர்.
அடுத்தபடியாக, மனைவியரைப் பற்றிய ஒரு கேள்வி எழுந்தது. "என் மனைவி மிகவும் நல்லவள். ஆனால் எதிர்த்து நின்று பேசுகிற பழக்கம் உடையவளாக இருக்கிறாள். அவளைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்று ஒருவர் கேட்டார்.
“எதிரில் நின்று கணவனின் பேச்சுக்குப் பேச்சு எதிர்ப்பேச்சு பேசுகின்ற மனையாளைக் காட்டினும், பேய் மிகவும் நன்மை தருவது?” என்றார் ஔவையார்.
“ஒருவன் என் நண்பனாக இருக்கின்றான். என்னுடன் அடிக்கடி அன்புடன் பேசுகின்றான்.அவனை நண்பனாக என்னால் ஏனோ கருத முடியவில்லை. அவனுக்கு என்பால் உள்ளன்பு கிடையாது என்பது மட்டும் புலனாகின்றது. இதனைப் பற்றித் தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?" என்றான் ஒருவன்.
“சொல்வதற்கு என்ன இருக்கிறது? உண்மையான அன்பு தானே நட்பின் அஸ்திவாரம். அஃது இல்லாத நண்பன் நண்பனே அல்லன். அவனுடைய நட்பினைக் காட்டிலும் பகைமையே மிகவும் மேலானது” என்றார் ஔவையார்.
வாழ்வு என்பது, இன்பமாக மகிழ்வுடன் வாழுகின்ற வாழ்வு தான். அஃதின்றி, வாழ்வு துன்பமுடையதாகவும் இன்பமற்றும் இருக்குமாயின், அந்த வாழ்வினால் பயன் யாதும் இல்லை.
வாழ்வு இன்பமாக நிகழ்தற்குப் பொருள் வேண்டும். பொருள் குறைந்தால் வாழ்வில் இனிமையும் குன்றும். வாழ்வின் இனிமை குறையும்போது துயரங்கள் அங்கே குவிந்துவிடும். இதுபற்றியே, 'பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகில் நல்வாழ்வு கிடையாது’ என்று திருக்குறள் கூறுகின்றது.
இவ்வாறு, வாழ்வற்றுப்போய் அடுத்தடுத்து வரும் சங்கடங்கள் ஒருவனுடைய வாழ்விலே மிகுமானால், அவன் அவற்றை ஏற்று நொந்து கழிவதைவிடச் சாதலே நன்மையாக இருக்கும்.
இந்தச் செய்யுளில், ஔவையார் சில அரிய செய்திகளை உலகுக்கு உரைக்கின்றார்.
ஏசியவாறு கொடுப்பது ஒன்று. கொடையின் பயன் இரந்தவனுக்குக் கிடைப்பதாயினும், அது கொடுப்பவன் மனம் விரும்பிக் கொடுக்காத தன்மையைக் கொண்டிருக்கிறது. ஆகவே, அப்படிக் கொடுத்துக் கொடையின் பயனான புகழினை இழந்து பழியை மிகுப்பதைவிட, அவன் கொடாத கருமியாகப் போவதே நல்லது என்கின்றனர்.
அடுத்து, கணவன் மனைவியரின் கலந்த ஒருமை வாழ்வினை எடுத்துக் கொள்கின்றார். மனைவி கணவனை எதிர்த்து நின்று பேசும்போது, அந்த ஒருமை வாழ்வு சீர்குலைந்து சிதறியதைத்தான் அது காட்டும். அப்படிச் சிதறிய பின்னர் அவளுடன் கூடி வாழ்வது தீராத வேதனையைத்தான் தரும். அந்த வேதனையைவிடப் பேயுடன் கூடி வாழ்வதே நன்றாயிருக்கும் என்கிறார். கொடிய குணமுடைய பேயினை எதிர்நின்று பேசும் மனைவியினும் நல்லது என்பதன் மூலம், மனைவியரின் வாயடக்கத்தினை வற்புறுத்தி உரைக்கின்றார் ஔவையார்.
'நட்பு' உள்ளக் கலப்பிலேதான் உருவாவது. உள்ளக் கலப்பில்லாமல், சூழ்நிலைகளின் காரணத்தால் வருகிற சில பல ஊதியங்களை மனத்துட்கொண்டு நட்பினர் போலப் பழகுவர் பலர். அத்தகையவரின் நட்பு நட்பு அல்ல; தீமை தருவதும் அதுவாகும். அதனைவிடக் கொடிய பகையே நன்றானது என்றனர். உள்ளங்கலவாத நட்பினால் வருகின்ற துயரம் மிகுதியாகும் என்பதையும் உணர்த்தினார்.
'சாதல்' வாழ்வின் முடிவு. வாழ்வு கைகூடாத போதும், அதிற் சங்கடங்கள் சூழும்போதும், அந்த வாழ்விலே கிடந்து கழிவதினும் சாவே மேலானது என்கின்றனர். இதனால் வாழ வசதி இழந்துவிட்டவர் செத்துவிடல் வேண்டும் என்பது பொருளன்று. அவர்கள் முயன்று அதனைச் சீராக்கிக் கொள்ளல் வேண்டும் என்பதே பொருளாகும்.
ஏசி யிடலின் இடாமையே நன்றெதிரில்
பேசும் மனையாளில் பேய்நன்று - நேசமிலா
வங்கணத்தின் நன்று வலியபகை வாழ்விலாச்
சங்கடத்தில் சாதலே நன்று.
"ஒருவர் வந்து இரந்து நிற்கின்றார். அவரை ஏசிக் கொண்டே ஒருவன் கொடுக்கின்றான். அப்படி அவன் கொடுப்பதினும் கொடாமல் இருப்பதே வந்தவனுக்கு நன்மையாக இருக்கும். கணவனுக்கு எதிரிட்டு நின்று பேசுகிற மனையாளை விடப் பேயே ஒரு கணவனுக்கு நல்லதாக இருக்கும். அன்பற்ற நட்பினைக் காட்டிலும் கொடிய பகையே மேலானது. வாழ்விற்கு வேண்டிய பொருளற்ற வறுமை நிலையினும், சாவதே நன்மை தருவதாக இருக்கும்” என்பது பொருள்.
‘எதிரில் என்பதை எதிர் இல்’ எனப் பிரிக்கலாம். அப்போது எதிர்வீட்டிலே போய்க் கதையளக்கும் அடக்கமற்ற மனைவியர் என்று பொருள் தரும்.