உள்ளடக்கத்துக்குச் செல்

ஔவையார் தனிப்பாடல்கள்/பெரியது எது?

விக்கிமூலம் இலிருந்து

57. பெரியது எது?

“உலகிற் 'பெரியது' எது?” இது முருகனின் அடுத்த கேள்வி. இதற்கு மிகவும் நுட்பமாக விளக்கம் கூறுகிறார் ஔவையார்.

"நாம் கண்ணாற் காணுகின்ற இந்தப் புவனம் மிகவும் பெரியது. இதனைப் படைத்தவனோ நான்முகன். அதனால், அவன் இதற்கும் பெரியவன் ஆகிறான்.

அந்த நான்முகனோ கரிய திருமாலின் உந்தியிடத்திலே பிறந்தவன். திருமாலோ அலைகடலிலே துயில்பவன். இதனால் நான்முகனிலும் திருமால் பெரியவன்; அவனினும் அலைகடல் பெரிதாக எண்ணத்தக்கது.

அலைகடலோ, ஒரு காலத்தில் அகத்தியரின் கையிலே அடங்கியதாயிற்று அகத்தியரோ கலயத்தில் பிறந்தவர்!

கலயமோ புவியிடத்துச் சிறிதளவான மண் புவியோ ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமை அளவே.

ஆதிசேடனோ, உமையவளின் ஒரு சிறு விரலிடத்தே மோதிரமாக இருப்பவன். உமையோ, இறைவனின் ஒரு பாதியுள் அடங்கி விடுபவள். இதனால், இறைவனே அனைத்தினும் பெரியவன் ஆகின்றான்.

பெரியவனான அப் பெருமான், அன்பர்களின் உள்ளத்தே நிலவி வருபவன். இதனால், எல்லாம் வல்ல சிவபெருமானைத் தம் உள்ளத்தில் கொண்டவரான தொண்டர்கள்தாம் உலகில் மிகவும் பெரியவர்கள். அவர்களின் பெருமை சொல்லிக்காட்டவும் முடியாத அளவிற்கு மிகமிகப் பெரியது ஆகும்” என்றார்.

பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரியது பெரியது புவனம் பெரியது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவன் பாகத்து ஒடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!

“வெம்மை பரவிய வேலோனே! உலகமோ மிகவும் பெரியது. அது நான்முகனால் படைக்கப்பெற்றது. நான்முகனோ திருமாலின் உந்தியிற் பிறந்தவன். திருமாலோ பாற்கடலில் பள்ளி கொள்பவன். பாற்கடல் குறுமுனியின் உள்ளங்கையில் அடங்கியது. குறுமுனியோ கலசத்தில் பிறந்தவன். கலசமோ புவியிலுள்ள சிறிதளவு மண்ணினால் உருவானது. புவியோ ஆயிரம் தலைகளுடைய ஆதிசேடனுக்கு ஒரு தலைச்சுமையாக மட்டுமே இருப்பது. அவனோ உமையவள் சிறுவிரலின் மோதிரமாக விளங்குபவன். உமையோ இறைவரின் ஒரு பாகத்தே ஒடுங்கியிருப்பவள். இறைவரோ தொண்டர்களின் உள்ளத்தே அடங்கியிருப்பவர். அதனால், தொண்டர்களின் பெருமைதான் சொல்லிலடங்காத அளவுக்குப் பெருமை உடையதாகும்” என்பது பொருள்.