உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தென்பாண்டிச் சிங்கம் 211 நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான பாட்டாளிகளும் ஊர்மக்களும் வடம் பிடித்து இழுத்தால்தான் தேர் நகரும்! அது மட்டுமா? பின்னாலிருந்து சிலர் தேர்ச்சக்கரத்தை அசைத்துவிட உலுக்கு மரம் போட வேண்டும்! வீதியில் தேர் ஒழுங்காகச் சென்று மீண்டும் நிலையடிக்கு வந்திட ஆங்காங்கே முட்டுக்கட்டைகளைப் போட்டுச் சக்கரங்களை ஒழுங்கான பாதையில் திருப்பிவிடச் சில பேர் அறிவு நுட்பத்துடன் பணியாற்ற வேண்டும். ஆனால் இத்தனைச் சிரமங்கள் இருப்பதை அறியாத குழந்தைகள் தேரின் முகப்பில் சுட்டப்பட்டுள்ள பொம்மைக் குதிரைகள்தான் தேரை இழுப்பதாக எண்ணிக் கொள்ளும். தேர் மட்டுமா! நாட்டில் எத்தனையோ நல்ல காரியங்கள் நடக்க, நரம்பை முறித்துக் கொண்டும் எலும்பை உடைத்துக் கொண்டும் உழைப்போர் பலராயிருக்க, எல்லாம் என்னால்தான் என்று எத்தனை "பொம்மைக் குதிரைகள்" போலி நாடகம் ஆடுகின்றன! அதையும் நம்புகின்ற பாமரர்கள் குழந்தையினும் குழந்தையாக இருக்கிறார்கள் அல்லவா? தேரோட்டம் காணவும் கள்ளர் நாடுகள் பலவற்றின் அம்பலக்காரர்களின் வருகையைக் கண்டு களிக்கவும் பாகனேரி, காடனேரி, நகரம்பட்டி, மற்றுமுள்ள பாகனேரி நாட்டுக் கிராமங்களின் மக்கள் திரள் திரளாகக் குழுமினர். பாகனேரிச் சிவன் கோயிலில் பட்டுப் பரிவட்ட மரியாதையைப் பெற்றுக் கொண்டு அதன் பின்னர் தேரோட்டத்தைத் தொடங்கி வைக்க வாளுக்குவேலி வருகிறார் என்பதை வெள்ளமெனச் சூழ்ந்திருந்த மக்கள் இதயங்குளிரச் சொல்லிக் கொண்டு தேரோடும் வீதிகளில் அலைமோதிக் கொண்டிருந்தனர்.