உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 கலைஞர் மு. கருணாநிதி "விடாதீர்கள்! விடுதலைக் கும்பலை விரட்டி யடியுங்கள்! சிறுவயல் வீழ்ந்தால் அடுத்தது காளையார் கோயில் நமது காலடியில்தான்! உம்... முன்னேறுங்கள்!!" கர்னலின் முழக்கத்திற்கு ஏற்ப அவனது படை, சிறுவயல் நகரத்தைக் கைப்பற்றக் கங்கணம் கட்டிக் கொண்டு, மருது பாண்டியரின் வீரர்களை வளைத்துக் குண்டு மாரி பொழியத் தொடங்கியது. உயிரினும் மேலாகத் தங்கள் மண்ணை நேசித்த அந்த மறவர்குல திலகங்கள், தங்களது தலைவர்களில் ஒருவனான சின்னமருதுவைப் பகைவர்களின் கையில் சிக்கவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு, சிறுவயலுக்குள் அவர்கள் நுழைந்து விடாமலும் தடுத்திடத் தங்கள் பிணங்களையே குறுக்கே போட்டிடத் தயார் என்ற நிலையில் சமர் புரிந்தனர். துப்பாக்கிகளைப் ஆயிரக் கணக்கானோர் பயன்படுத்திப் போரிடும்போது அவர்களை எதிர்த்து நூற்றுக் கணக்கான விடுதலை வீரர்கள் குறைந்த அளவில் துப்பாக்கிகளையும், மற்றும் ஈட்டிகளையும் வாட்களையும் கொண்டு சமாளிப்பது சாதாரண காரியமா? எதிரிகளுக்குச் சாதகமாக இருளும் அமைந்துவிட்டது! அவர்களுக்குச் சாதகமான அந்த இருளைத் தனக்கும் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சின்னமருது சில வீரர்களுடன் கோட்டையிலிருந்து தப்பிவிட்டான் என்ற செய்தி கர்னல் அக்னியூவின் காதுக்கு எட்டியது. சிறுவயலில் இருந்து காளையார் கோயில் வரையில் அடர்ந்து நீண்டுள்ள காட்டுப் பாதை வழியாகத்தான் சின்னமருது சென்றிருக்க வேண்டும் என்று யூகித்துக் கொண்ட அக்னியூ சிறு வயலில் நகரத்தைத் தனது ஆதிக்கத்தின்கீழ்க் கொண்டு வர மிக அவசரம் காட்டினான்.