உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு செங்குத்தான பள்ளத்தாக்கில் காரோடு விழுந்து நொறுங்கிப் போய்விடுவோம். அப்படிப்பட்ட ஆபத்தான விளிம்பில் கார் நின்று கொண்டிருந்தது. காரில் இருந்த மூவரும் மெதுவாகக் காரை விட்டு இறங்கினோம். நாங்கள் இறங்குகிற நேரத்தில் கார் கொஞ்சம் அசைந்திருந்தாலும் படுபாதாளத்தில் நாங்கள் விழுந்திருக்க நேரிடும். மிக மெதுவாகக் காரை முன்னுக்குத் தள்ளி மாற்றுப் பாதை வழியாகச் சென்னை நோக்கிப் புறப்பட்டோம். மழை பொழிந்து கொண்டே யிருந்தது. சென்னைக்கு அருகில் 4, 5 மைல் தொலைவில் நாங்கள் வந்ததும் காரும் பழுதாகிவிட்டது. அந்தக் கார் நேஷனல் பிக்சர்ஸ் உரிமையாளர் திரு பி.ஏ. பெருமாளுக்குச் சொந்தமானது. 'காரைத் தள்ளிக் கொண்டே போய் விடலாம்என்று என்னைக்காரிலேயே உட்காரவைத்துவிட்டு சிவாஜியும், கருணானந்தமும் காரைத் தள்ளத் தொடங்கினார்கள். நான் எவ்வளவோ சொல்லியும் என்னைக் கீழே இறங்க விடாமல் தடுத்து விட்டார்கள். 4, 5 மைல்கள் அந்த மழையில் அந்தக் காரைத் தள்ளிக்கொண்டே வந்த நிகழ்ச்சியையும், அதுவும் என்னைக் காரில் உட்காரவைத்தே தள்ளிக்கொண்டு வந்த நிகழ்ச்சியையும், இப்போது கூட, நண்பர் கணேசன் என்னைச் சந்திக்கும் போதெல்லாம் வேடிக்கையாகச் சொல்லாமல் இருப்பதில்லை.