உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேடையிலே இருந்தவர்கள் எல்லாரும் கீழே இறங்கி வந்தோம். உடனே என்னை நோக்கி அண்ணா தொடுத்த முதல் கேள்வி, "பத்து லட்சம் சேர்க்க நம்மால் முடியுமா?” - என்பதுதான். நாவலர், என். வி. என்., வெற்றி வீரர் என்று அந்த மேடையில் அறிமுகப்படுத்தப்பட்ட நண்பர் ப.உ. சண்முகம் முதலான அனைவருமே "முடியுமா? முடியுமா?" -என்றே என்னைக் குடைந்தெடுத்துவிட்டனர், கேள்விக் கணைகளால். அப்போது அவர்களுக்கு நான் என்ன விடை சொல்ல முடியும் - புன்னகையைத் தவிர? ஆயினும், 'முடியுமா?” என்கிற அந்தச் சொல் என் செவிகளைச் சுற்றியே வளைய வளைய வந்தது, வண்டாக! அண்ணாவும் சரி, மற்ற கழக நண்பர்களும் சரி, தேர்தல் நிதி பற்றிய என்னுடைய அறிவிப்பைக் கேட்டுத் திகைப்பிலே திணறிய தற்குக் காரணம் இல்லாமலும் இல்லை. பத்து லட்சம் என்பது கழகத்திற்குக் கற்பனைத் தொகையாகவே இருந்த காலம் அது. அவ்வளவு பெருந்தொகையைத் திரட்டுவது பற்றித் தினையளவுகூட நினைக்க முடியாத நேரமும் ஆகும் அது. என்றாலும், திருவண்ணாமலை இடைத் தேர்தலில் கழகம் கற்ற பாடங்கள் - சந்திக்க நேர்ந்த அனுபவங்கள் - அந்தத் தொகையாவது இருந்தால் தான் 1967 தேர்தலில் காங்கிரசின் யதேச்சாதிகாரப் போக்கினுக்குச் காற்புள்ளி அல்ல, முற்றுப் புள்ளியே வைக்க முடியும் என்கிற கணிப்பினை எனக்குக் கொடுத்தன. இதனையே பிறகு நான் மற்றவர் களிடம் விளக்கிச் சொன்னேன். என்னதான் நான் விளக்கங்களை எடுத்து வைத்தாலும், கழக முன்னணியினர் இந்தத் தொகையைச் சேர்த்து முடித்து விட்டால் அது ஒரு பெரிய அற்புதமே என்பதாகக் கருதினர்; பேசினர். அண்ணாவும், தொடக்கத்தில்தான் என் அறிவிப்பைக் கேட்டு மலைத்தாரே தவிர, என்னுடைய முனைப்பான முயற்சிக்குத் தம்முடைய முழு வாழ்த்தையும் பிறகு வழங்கினார். அவருடைய ஒத்துழைப்பும் உறுதுணையும் இறுதி வரை எனக்கு இருந்தன. என்னுடைய நிதி திரட்டும் பணியினை அவ்வப்போது நெஞ்சாரப் பாராட்டிய அவர், "பத்து லட்சத்திற்கு இன்னும் எவ்வளவு தொகை குறைகிறது?" என்று அடிக்கடி கேட்பதையும் தமது வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்தக் கடற்கரைக் கூட்டத்திற்கு அடுத்த இரண்டொரு நாட் களிலோ, ஒரு வேதனையைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிலைமையும் ஏற்பட்டது அண்ணாவுக்கு. 444