உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/613

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பட்டதாரியான அவர், இன்னொரு பட்டதாரி ஆசிரியையான குஞ்சிதம் அம்மையாரைப் பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கலப்பு மணமே புரிந்துகொண்டார். அந்தப் 'புரட்சித் திருமணம்' சாதிச் சழக்குகளுக்குச் - சனாதனச் சடங்கு முறைகளுக்கு அடிக்கப்பட்ட சாவுமணியாகவே அன்று பெருமிதத்தோடு பேசப்பட்டது. பிற்காலத்தில் சீர்திருத்தத் திருமணங்கள் - கலப்பு மணங்கள் பெரு மளவு நிகழ்வதற்கு அது முன்னோடியாக விளங்கிற்று என்றாலும் மிகையில்லை. திருமணத்திலே புரட்சி புரிந்திட்ட ‘குத்தூசியார்’ - தம்முடைய குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதிலும் புரட்சி செய்யத் தவறிட வில்லை. சமதர்மக் கொள்கைகளின் முதல் தாயகமாய்த் தலையெடுத்த ரஷ்ய நாட்டைப்போலவே இந்த நாடும் தழைத்திட வேண்டும் என்கிற வேட்கையை வெளிப்படுத்துகின்றவராய்த் தம் பெண் குழந்தைக்கு 'ரஷ்யா' என்ற பெயரிட்டார். பழமைக்கு மண்டியிட மறுத்துப் புதுமைச் சிந்தனைகளைப் பரப்பிடப் புறப்பட்ட புத்தரிடம் தமக்குள்ள ஈடுபாட்டினை எடுத்துக் காட்டும் வகையில் தம்முடைய ஆண் பிள்ளைக்குக் 'கவுதமன்' என்றும் பெயர் சூட்டினார். நகைச்சுவையை ஒரு கைவந்த கலையாகவே அவர் எழுத்திலே காட்டினார். வெறும் பொழுதுபோக்குக்காகவே வேறு சிலர் நகைச் சுவையைக் கையாண்ட வேளையில், சிந்தனையைக் கிளறிவிடும் சீரிய நோக்கோடு கசப்பு மருந்துக்கு மேலே தடவப்படும் இனிப்புச் சுவை யாகவே அதனை அவர் பயன்படுத்தினார். 'விடுதலை,' ஏட்டின் ஆசிரியராக விளங்கிய அவர் 'பல சரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் 'குத்தூசி' என்னும் புனை பெயரில் இந்தச் சமுதாயத்தின் அழுகல்களை - அலங்கோலங்களைக் குத்திக்குத்திக் காட்டிய எழுத்தோவியங்கள் என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. ‘விடுதலை’க்கு மட்டுமின்றி முன்னதாகப்'புதுமை முரசு', 'ரிவோல்ட்' (ஆங்கில ஏடு) ஆகியவற்றுக்கும், இறுதிக் காலத்தில் 'குத்தூசி' இதழுக்கும் ஆசிரியராக அமர்ந்து அரும்பணியாற்றியவர் குருசாமி. பெரியார் பாசறையிலே பெரும் படைக்கலனாய் நிமிர்ந்து நின்று, தன்மானக் கருத்துக்களைத் தவழ விட்டுப் பெருமை தேடிக் கொண்ட அந்தச் சுயமரியாதைச் சுடர் திடீரென்று அணைந்துவிட்டமை. எனக்குச் சொல்லொணாத துயரினையே தந்தது. அவர் தம் இல்லம் சென்று என் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டேன். வெளியுலகைப் பொறுத்தவரை திகைப்பூட்டும் செய்திகள் பலவற்றை இந்தோனேஷியா அப்போது தந்துகொண்டிருந்தது. 607