உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230

கலைஞர் மு. கருணாநிதி


230 $ கலைஞர் மு. கருணாநிதி "நான் எதையும் மறப்பதில்லை மன்னாதி மன்னரே! கரிகால் சோழரிடம் தாங்கள் பெற்ற மகத்தான வெற்றியைக் கூட நான் இன்னும் மறக்கவில்லை. $ "வெற்றி மயக்கத்தில் வீழ்ந்து கிடக்கும் சோழ மண்டலத்துக்கு விரைவில் பாடம் கற்பிக்கத்தான் போகிறேன். தோல்வி என் தோள்களை மேலும் வலுப்படுத்தியிருக்கிறதே தவிர என்னைத் துவளச் செய்துவிடவில்லை." "சரி ...சரி... இந்நேரத்தில் இங்கு என்ன வேலை?" அவனுடன் பேச்சுக் கொடுப்பது தன் காரியங்களைக் கெடுத்துவிடக் கூடும் என்று கருதிய முத்துநகை, தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு பணிவுடன் பேச ஆரம்பித்தாள். "வேலையொன்றுமில்லை, என் மாளிகையில் சிறைப்பட்டிருக்கும் உனக்கு வசதிகள் போதுமானவைகளாக இருக்கின்றனவா என்று அறிய வேண்டியதும், ஆவன செய்ய வேண்டியதும் என் கடமையல்லவா?" "மிகவும் நன்றி. நான் ஏன் இங்கு சிறைப்படுத்தப்பட்டிருக்கிறேன் என்று கூறலாமா?" "மண்டபத்தில் மயங்கிக் கிடந்தாய்; உன்னை என் ஆட்கள் இங்கு கொண்டு வந்து சேர்த்தார்கள். ஆணுடையில் இருந்த உன்னைக் கண்டு என் தங்கை தாமரை அழுது புலம்பினாள். 'அய்யோ அத்தான்' என்று அலறினாள். எனக்கு ஒரே திகைப்பு! அதைவிடத் திகைப்பு - உன் வேடம் கலைந்த நிகழ்ச்சி; அடடா நீ பெண் என்பதை உணர்ந்ததும் என் தங்கைக்கு ஏற்பட்ட ஏமாற்றம் இருக்கிறதே, அதை விவரிக்கவே முடியாது. தங்கை ஏமாந்தாள். ஆனால் நான் விழித்துக் கொண்டேன். சோழ நாட்டுக்கு எங்களைக் காட்டிக் கொடுக்கும் வஞ்சகியொருத்தி அகப்பட்டாள் என்று அகமகிழ்ந்தேன். அதற்குப் பிறகு உன்னைச் சிறை வைப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும், சொல்!" "சிறையில்தான் அடைத்து வையுங்கள் - அல்லது சித்திரவதை செய்து கொன்று போடுங்கள்; எனக்கு இனி எதைப் பற்றியும் கவலையில்லை. இனி எனக்கு விடுதலை கிடையாது என்று நன்றாகப் புரிகிறது. என் வாழ்வின் கடைசிக் கட்டத்தில் உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்; தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். வீர பாண்டியை என்ன செய்தீர்கள்?" "வீரபாண்டி யார்? அந்த மதுரை ஒற்றனா? அவனைத்தான் படுகாயப்படுத்தி மரண வாசலுக்கு வழியனுப்பி வைத்துவிட்டார்களே என் ஆட்கள்?"