ரோமாபுரிப் பாண்டியன்
237
ரோமாபுரிப் பாண்டியன் 237 அலட்சியத்தால் அவள் அனைவரையும் ஏமாற்றிவிட்டு இவ்வளவு தூரம் வந்துவிட்டாள். அதோ... பூம்புகார் நகரத்து நுழைவு வாயிலும் வந்து விட்டது. அதில் நுழைந்து விடுவதற்குள் அவளைத் தடுத்தாக வேண்டும். அதற்குமேல் அவளைப் பின்தொடர்ந்து சென்றால் தன்னைச் சோழநாட்டுக் காவலர்கள் சிறைப்படுத்தி விடுவார்கள்; இருங்கோவேள் மன்னன் உயிரோடு அகப்பட்டு விட்டால் அவர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்! பூம்புகார் முழுவதும் விழாக் கொண்டாடி மகிழ்வார்கள். இருங்கோவேள் அகப்பட்ட நாளை இந்திர விழாவாக ஆக்கிக் கொள்வார்கள். இறந்து போனாலும் போகலாமே தவிர, சோழநாட்டு வீரர்களிடம் உயிரோடு அகப்படக் கூடாது. இப்படியெல்லாம் எண்ணியவாறு அவன் அரசியின் குதிரைக்கு. மிக மிக அருகாமையில் வந்து அந்தக் குதிரையைத் தடுத்து நிறுத்த முனையும் சமயம் அவளுடைய குதிரை நகரின் நுழைவு வாயிலுக்குள் புகுந்துவிட்டது. அதற்குமேல் செல்ல அவன் விரும்பவில்லை. அப்படியே சிலைபோல் நின்று விட்டான். அதற்குள் பொழுதும் நன்றாக விடிய ஆரம்பித்து விட்டது. இனி அங்கே நிற்பதும் ஆபத்து எனக்கருதி. வந்த வழியே அவசரமாகத் திரும்பினான். பூம்புகாருக்குள் புகுந்த அரசி அந்த அழகுத்திருநகரின் எழில் நிறை வீதிகளில் குதிரையில் போய்க் கொண்டிருந்தாள். சோழ நாட்டு மாதரசிகள் தங்கள் வீட்டு வாயில்களைச் சுத்தம் செய்து மூவேந்தரின் சின்னங்களான புலி, வில், கயல் ஆகியவற்றைக் கோலங்களாக்கிக் கொண்டிருந்தனர். உழவர் பெருமக்கள் தங்கள் தங்கள் செழித்துக் கொழுத்த எருதுகளை ஓட்டிக் கொண்டு கழனிப் பக்கம் போய்க் கொண்டிருந்தார்கள். துறைமுகத்தை நோக்கி மயில் தோகைகளைக் கட்டுக்கட்டாகக் குவித்த வண்டிகள் சென்ற காட்சி பெருந்தேவியினுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. மிளகு மூட்டைகளை உடல் வலுத்த பாட்டாளிகள் துறைமுகத்தின் பக்கம் தூக்கிச் செல்வதையும், அவர்களின் முகத்திலே காணப்பட்ட பூரிப்பையும் உற்சாகத்தையும் கண்டு பெருந்தேவி வியப்படைந்தாள். வீதிகளைக் கடந்து துறைமுகத்திற்கே குதிரை வந்து விட்டது. அடடா! அந்தத் துறைமுகத்தில் அவள் கண்டு சுவைத்த காட்சிகள் தமிழகத்தின் பழம் பெருமையைப் பாடக்கூடிய காட்சிகளாகும். வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான வாட்ட சாட்டமான குதிரைகள்! இங்கிருந்து ஏற்றுமதியாகும் மிளகு மூட்டைகள்! மயில் தோகைகள்! பாம்பின் தோல்! வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்! குடமலைப் பிறந்த ஆரமும்