ரோமாபுரிப் பாண்டியன்
345
ரோமாபுரிப் பாண்டியன் 345 தில் மூழ்கடிக்கவில்லை. ஆகவே, மன்னனையும், மன்னனை அழைத்துச் செல்லும் மங்கையையும் அவர்களும் பின் தொடர்ந்து சென்றார்கள். நடுக்காட்டில் - மரங்களடர்ந்த பகுதியில் இருங்கோவேள் கட்டி வைத்திருக்கிற மரமாளிகையைக் கண்டு கரிகால் மன்னன் வியந்தான். சோழ மண்டலத்தை அழிக்கக் கருதிய நச்சு வித்து அங்குதான் முளைத்தது என்றாலும் வேளிர்குலத்தவர் அமைத்துக் கொண்டிருக்கிற ராஜரீகத்தை அவனது உள்ளம் போற்றத்தான் செய்தது! பயங்கரச் சூழ்நிலையிலே அந்த மாளிகை இருந்த போதும், அப்போது மயான அமைதி அங்கே குடி கொண்டிருந்தது. ஆள் நடமாட் டமே எதுவுமின்றி வெறிச்சோடிப் போயிருந்தது. இன்றைக்கு முதல் நாளோ, அல்லது சில மணி நேரங்களுக்கு முன்னதாகவோ, கரிகாலனும் முத்துநகையும் அங்கே துணிவுடன் நடந்து வந்திருக்க முடியுமா? வேளிர் குடியினர் விரோதிகளைக் கண்டுவிட்ட வெறிக் கூத்தில் ஆனந்தத் தாண்டவமே ஆடியிருப்பார்களே! அவர்களது ஆட்டபாட்டப் பேரொலியில் காட்டு விலங்குகள் கூட ஓடி ஒளிந்திருக்கக் கூடுமே! 'பகை' என்றும், 'தூள்' என்றும் எழுப்புகிற பழி வாகும் பேரிரைச்சல் கேட்டுப் பறவைகள் எல்லாம் மரக்கிளையிலிருந்து பறந்தோடி மறைந்திருக்கக் கூடுமே! சுற்றியிருந்த மரவீடுகளையும், பாசறையையும் பார்த்துக் கொண்டே வந்த மன்னன் ஓர் அறையின் வாசலுக்கருகே வந்ததும் சற்றுப் பின் வாங்கினான். முத்துநகை உள்ளே பார்த்தாள். வேளிர்குல வீரனொ ருவன் மார்பிலே பாய்ந்த கட்டாரியுடன் பிணமாகக் கிடந்தான், அங்கே! "இந்த அறையிலிருந்து தப்புவதற்காக இதயத்தை இரும்பாக்கிக் கொண்டு நான் நடத்திய செயல்தான் இது!' என்று சொல்லிக்கொண்டே சென்ற முத்துநகை, “அதோ பார்த்தீர்களா?" என்று சுட்டிக் காட்டினாள். என்ன இது! நாம் அங்கு போகவேண்டுமா, என்ன?" என்று கேட்டான் மன்னன்.. 'சாவூருக்கு போகும் வழி!' என்ற எழுத்துக்களை அங்கே பார்த்தான் கரிகாலன். இல்லை; இல்லை! உங்களைச் சாவூருக்கு அனுப்ப அன்று பூம்புகார்த் தெருவிலே சதி நடத்தினானே ஒரு வேளிர்குல வீரன்; அவனை வீழ்த்திய செழியன் இங்கு தான் இருக்க வேண்டும்! சோழ நாட்டு வீரர்களை அடைத்து வைத்து ஆத்திரம் தீரும்வரை சித்திரவதை செய்வதும் இங்குதானாம்! வாருங்கள்! என்று அழைத்தாள் முத்துநகை.