ரோமாபுரிப் பாண்டியன்
373
ரோமாபுரிப் பாண்டியன் 373 எழுதி எழுதி வாழும் வேலை பிடிக்கவில்லை. இருங்கோவேளிடம் கூறி என்னை நாட்டின் அமைச்சராக்கச் சொல்! இந்தா ஓலையைப் பிடி!" செழியனுக்கும் அந்த ஓலைச் சுவடியை வாங்கிவிட வேண்டுமென்ற எண்ணம் பிறந்தது. புலவர், தேசத் துரோகியாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்குக்கூட அவன் வந்துவிட்டான்! தன்னை வேளிர் வீரனென நம்பித் தன்னிடம் கொடுக்கிற ஓலையின்மூலம் வேறு பல உண்மைகளைத் தெரிந்து கொள்ளக் கூடுமென்று கருதி, செழியன் புலவர் கொடுத்த ஓலைச் சுவடியை வாங்கிக் கொண்டான். வாங்கியதும் தன்னைச் சூழ்ந்துவரும் மெய்க்காவல் படையினர் அந்த ஓலைச் சுவடியைப் பிடுங்கிக் கொண்டு போய்விடுவார்களோ என்ற அச்சம் வேறு பிறந்தது. அப்படியே தன் கையை விட்டுப் போனாலும் போக வேண்டிய இடத்துக்கு - அரசரிடம் தான் போய்ச் சேரும் என்ற நம்பிக்கையில் அதை தன் கையில் பத்திரமாக வைத்துக் கொண்டான். 'அதிக நேரம் இங்கு நிற்பதில் பயனில்லை. வெளியேறிவிட வேண்டும்' என்று முடிவு செய்து புலவரிடம், "வருகிறேன்' என்று வணக்கம் செலுத்திவிட்டுப் புறப்பட்டான். எவ்வழியாக வெளியேறுவது என்று புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கெதிரே ஒரு கதவு திறந்தது. மகிழ்ச்சியும் மனக்கலக்கமும் ஒன்றையொன்று வென்றிடப் போட்டியிடும் இதயம் படைத்த அந்த வீரன், ஓலைச் சுவடியுடன், திறந்த கதவின் வழியே சென்றான். மெய்க்காவல் படையினரும் அவனைத் தொடர்ந்தனர்.-உருவிய கத்திகளுடன்!