436
கலைஞர் மு. கருணாநிதி
விளக்குகள் ஏற்றப்பட்டுச் சில நாழிகைப் பொழுதே சென்றிருந்த முன்னிரவு நேரம். சூலுற்ற பெண் சேய் பிறந்திடும் வேளையில், வேதனை தாங்கிடாமல். முனகிப் புலம்பித் துடியாய்த் துடித்திடுவாள் அல்லவா? அப்படித்தான் கருமுகிலைச் சுமந்திட்ட வான நங்கையும் பொருமி, அரற்றினாள் இடியும் மின்னலுமாக! மழைக் குழந்தை, மண்ணின் மடியிலே தாவி விழுந்து தவழ்ந்திடத் தொடங்கிற்று. குடிகாரக் கணவன் தன் மனைவியின் கூந்தலை இறுக்கிப் பற்றிக் குலுக்கிச் சுழற்றுவதுபோல, மரம் - செடிகளின் கிளைகளும், இலைகளும் படாத பாடுபட்டுத் தவித்திடக் கோரமான காற்றும் சீறிச்சீறி வீசியது. தமிழைப் புறக்கணித்த பெயர்ப்பலகையை வீசியெறிந்திட்ட தளிர்கொடியைத் தேடிக் காப்பாற்றுமாறு தன் அரண்மனை வீரர்களை அனுப்பியதோடு அமைதியுறவில்லை இளம்பெருவழுதி; தானே புரவி மீதேறி அவளைத் தேடிடும் முயற்சியில் இருளோடு இருளாக அவன் ஈடுபட்டான். கடற்கரையோரமாகவே சில கற்கள் தூரம் சென்றிருப்பான். 'பளீர்'-என்று கண்ணைப் பறித்திடும் மின்னல் வெட்டு. அந்த வெளிச்சத்திலே, ஒரு நெடிய தென்னை மரமும் அதன் அடியிலே வெள்ளைக் குதிரையொன்றும் தெரிந்தன. நன்றியுணர் வோடு, கீழே விழுந்து கிடக்கும் ஓர் உருவத்தைச் சுற்றி வந்தது அந்த வெண்புரவி. அந்த இடத்தினை அணுகிவிட்ட இளம்பெருவழுதி கீழே குனிந்து கூர்ந்து நோக்கினான். அடுத்த மின்வெட்டில்... நிலைகுலைந்து கிடந்த அந்த உருவம் ஓர் அணங்குதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. சிவந்திப் பூக்களாலே யாரோ சிலை வடித்துப் போட்டாற்போலத் துவண்டு கிடந்தாள் அந்தச் சேயிழை. அவளுடைய