உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

512

கலைஞர் மு. கருணாநிதி


சிப்பியோவின் உரத்த குரல் செழியன் உறக்கத்தைக் கலைக்கத் தவறிடவில்லை. உள்ளங்கையால் அழுத்திக் கசக்கி, இமைக் கதவுகளைத் திறந்து கொண்ட அவன், கொட்டாவி விட்டவாறே படுக்கையில் எழுந்து அமர்ந்திட்டான். காலைப் பகலவனின் கோல ஒளி, அந்த மரக்கல அறையினுள் வட்டவடிவமான சிறு சாளரத்தின் வழியே மெள்ள எட்டிப் பார்த்திட முனைந்தது. உடம்பினை நெளித்துச் சோம்பலைத் துரத்திட முயன்றிட்ட செழியன், நாம் இப்போது எங்கே வந்திருக்கிறோம்? என்று தன் எதிரே நின்று கொண்டிருந்த சிப்பியோவை நோக்கிக் கேட்டான். “டைபர் நதி கடலில் கலந்திடும் இடத்துக்கு வந்து விட்டோம். தூதுவர் அவர்களே!" என்று விடையிறுத்தான் அந்த ரோமாபுரி இளைஞன். "இங்கிருந்து ரோமாபுரி நகருக்கு இன்னும் எவ்வளவு தொலைவு இருக்கும்?" "ஏறத்தாழப் பதினைந்து கற்கள் இருக்கலாம்." "அப்படியானால் விரைவிலேயே நம்முடைய இந்த நெடும் பயணம் முடிவு பெறப்போகிறது என்று சொல்லுங்கள்!" "ஆம், தூதுவர் அவர்களே!" "இத்தனை நாட்கள் கடலிலேயே பயணம் புரிந்திட்ட போதிலும், அலுப்போ, சலிப்போ அவ்வளவாக எனக்கு ஏற்படாமல் இருந்ததற்கு என்ன காரணம் தெரியுமா, சிப்பியோ?" “என்ன காரணம்?" "நீங்கள் எனக்கு வழித்துணையாக வாய்த்திட்டது தான்!" செழியனின் இந்தப் புகழுரையைக் கேட்டதும், வெட்கத்தால் உடல் குன்றிப் போனான் அந்த இளைஞன்.