534
கலைஞர் மு. கருணாநிதி
மறுநாள் காலை ரோமாபுரி செனேட் -பாராளுமன்றம் - கோலாகலமான மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து திளைத்திட்டது. அதற்குக் காரணம் தமிழகத்திலி ருந்து செழியன் கொண்டு வந்திருந்த பலவகையான பரிசுப் பொருள் களே. முத்துச் சரங்கள், யானைத் தந்தங்கள். மெல்லிழைத் துகில்கள், கிராம்பு, மிளகு, சந்தனம் மற்றும் வாசனைப் பொருள்கள் முதலானவற்றை தொட்டுப் பார்ப்பதிலும், நுகர்ந்து பார்ப்பதிலும் செனேட் உறுப்பினர்கள் தங்கள் வயது முதிர்ச்சியினையும் மறந்து ஆர்வம் காட்டினர். ஆர்ப்பரித்தனர். பரிசுப் பொருள்கள் வழங்கப்படுவதற்கு முன்னர் செனேட் உறுப்பினர்களுக்குச் சிறப்பான முறையிலே செழியனைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தார் அகஸ்டஸ். "மாண்புமிகு உறுப்பினர் அவர்களே! எந்தநாடு இந்த உலகிலேயே தொன்மைமிக்கதாகச் சொல்லப்படுகிறதோ; எந்த நாட்டுப் பொருள்கள் ரோமானியர்களை மட்டுமின்றி மேனாட்டார், கீழ்நாட்டார் எல்லாரை யுமே கவர்ந்துள்ளனவோ, எந்த நாட்டினுடைய தாய்மொழி, அதாவது தமிழ்மொழி இனிமை மிக்கதென்றும் பழைமை வாய்ந்ததென்றும் பாராட்டப்படுகிறதோ அந்த நாட்டிலிருந்து வந்திருப்பவரே இந்த தூதுவர். இவருடைய நாடு செழிப்பு மிகுந்தது என்று சொல்வார்கள். அந்தச் செழிப்பு என்னும் பொருளை உணர்த்தத்தானோ என்னவோ இவரது பெயரும் 'செழியன்' என்பதாகும். வயதில் - வடிவத்தில்தான் இவர் இளைஞரே அன்றி அறிவில் - ஆராய்ச்சியில் - பண்பில் பழக்கத்தில் இவர் முதியவரே. நாம் தெய்வங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடுகிற மேன்மை தங்கிய 'ஜூலியஸ் சீசர்' அவர்களைப் போலவே இன்று கீழை நாடுகளிலே இணையற்ற மாமன்னராகத் திகழ்பவர் கரிகால் பெருவளத்தான் என்னும் சோழப் பேரரசர் ஆவார். அவருடைய உயிரினைத் தக்க சமயத்தினில் காப்பாற்றிட்ட பெருமையும் படைத்தவர் இச்செழியன். நம்முடைய ரோமானியத் தூதுவர் இவர்களுடைய பாண்டிய நாட்டுக்குச் சென்றிருப்பதைப் பற்றித் தாங்கள் யாவரும் முன்பே அறிவீர்கள். -