ரோமாபுரிப் பாண்டியன்
553
ரோமாபுரிப் பாண்டியன் 553 என்ன கதை கட்டி விடுவார்களோ என்றும் தங்களுக்கு அச்சம், அப்படித்தானே?' தன்னுடைய நெஞ்சில் நெளிந்திடும் நினைவலைகளை எவ்வாறு இவ்வளவு சரியாக இந்த ஜூனோ கண்டுபிடித்தாள் என்று வியப்புற்ற அந்த தமிழகத் தூதுவனுக்கு, "ஆமாம், ஆமாம்; உன் ஊகம் சரிதான்" என்று தலையாட்டுவதைத் தவிர வேறு வழி ஏது? "இருந்தாலும் நீங்கள் இப்படியெல்லாம் அஞ்சிச் சாகக்கூடாது! மேலும், இந்த ரோமாபுரி நகரிலே அகஸ்டஸ் பெருமகனார் முதல் சாதாரண அடிமைவரை என் இயல்பைப் பற்றி - நடத்தையைப்பற்றி அறிவார்கள். நானே ஒரு வேளை தவறி நடந்திட்டால்கூட யாரும் இங்கே நம்பிடமாட்டார்கள். ஏனென்றால் ஆண்களைப் பொறுத்தமட்டில் நான் அவ்வளவு பொல்லாதவள்" என்று நகைத்திட்ட ஜூனோ செழியனின் மறுமொழி எதையும் எதிர்பார்க்காதவளாகத் தேரினில் போய் ஏறிக்கொண்டாள்; அவனும் அவளைப் பின் தொடர்ந்தான். சாரதியிடம் ஜூனோ ஏதோ கூறினாள். அடுத்த கணமே. வரும்பொழுது இருந்த விரைவினைக் காட்டிலும் கடுங்காற்றுப்பட்ட கருமேகத் திரள்போலக் கடுகிப் பறக்கலாயின புரவிகள். ஆனால், ஒவ்வொரு திருப்பத்தினையும் கடந்திடும் பொழுது, மிகுதியாகவே குலுங்கிப் பாய்ந்திட்டது தேர். அவ்வாறு குலுங்கிடும் பொழுதெல்லாம், ஜூனோவின் கட்டுக்குலையாத பட்டுடல், செழியன் மீது மெல்ல விழுவதும், பின்னர் விலகுவதுமாக வேடிக்கைகள் புரிந்திட்டது. செழியனுக்கோ... அந்தப் பருவக் கிள்ளையின் மெல்லிய உராய்வி னால் மேனியெங்கும் புல்லரிப்பு - புது வெப்பம் பரவிட நேர்ந்தாலும், அந்தச் சமயத்தில் தாமரையின் நினைவு வந்து அவனுக்கு எச்சரிக்கைக் கவசமாய்த் துணை புரிந்திட்டது. தேரின் குலுக்கல்களால் தனக்கும் செழியனுக்கும் ஏற்பட்டிடும் மேனி நெருக்கங்களைப் பற்றிய நினைவே இல்லாதவளைப் போல, விருந்து மண்டபத்திலே புயலினை எழுப்பிய சொற்போர்களைப் பற்றி விரித்துரைத்தாள் ஜூனோ. அவளுடைய கூற்றுகளைக் கூர்ந்து கவனித்துக் கேட்டு வந்திட்ட செழியன் "மேசனஸ் இந்த அளவுக்குப் பழி வாங்கிடும் உணர்ச்சி யுள்ளவராக இருக்கிறாரே; அவர் ஒருவேளை தமக்கென்று ஆட்களைத் திரட்டி அகஸ்டசை வீழ்த்திட முயல்வாரோ." என்று வினவினான்.