598
கலைஞர் மு. கருணாநிதி
598 கலைஞர் மு. கருணாநிதி "அப்படியானால் அது ஒருதலைக்காதல்; அந்த அப்பாவித்தனமான ஒருதலைக் காதலுக்காகவா வறண்ட பாலைவனமாக வாழ்வையே அழித்துக் கொள்வது! இது எல்லாவற்றையும்விடப் பெரிய முட்டாள் தனம்! இருங்கள், நான் இப்போதே போய் அகஸ்டஸ் பெருமகனாரிடம் சொல்லி உங்கள் பைத்தியக்காரத்தனம் எல்லாம் பறந்தோடுவதற்கு வழிசெய்து விடுகிறேன்?" "அய்யய்யோ இதைப்பற்றியெல்லாம் அவரிடம் போய் ஏதும் சொல்லித் தொலைக்காதே! என்ன கிளம்பி விட்டாய் ? சொல்வதைக் கேள்! என்று உரக்கக் கத்தியவாறே ஜூனோவை பின்தொடர்ந்து வெளிக்கூடத்திற்கு விரைந்து வந்திட்டான் செழியன். அங்கோ... முறுவல் பூத்து நின்றிருக்கும் முத்துநகையைக் கண்டதுமே அவன் செயலற்றுத் திகைத்திட்டான்; திகைப்பு வெள்ளத்தில் ஆழ்ந்து விட்டான். அவனைவிட ஜூனோதான் மிகவும் திடுக்கிட்டு விட்டாள். தனக்குப் போட்டியாகத் தமிழகத்திலிருந்து இன்னொருத்தி வந்து முளைக்கிறாளே என்கிற அச்சமோ? இல்லையென்றால் சாயம் கலந் திட்ட சல்லாத் துணிபோல் அவள் முகம் அப்படி வெளுத்துப் போவானேன்? "என்ன முத்துநகை இது? இப்படித் திடீரென்று...? நீ வரப் போவதைப்பற்றி முன் கூட்டியே எனக்குத் தகவல் தெரிவித்திருக் கலாமே!" "தெரிவிக்கலாம்தான். ஆனால் அதற்கெல்லாம் நேரம் ஏது? பெருவழுதிப்பாண்டியர் மீண்டும் படுக்கையில் விழுந்துவிட்டார்..." 'என்ன! பாண்டிய மன்னர் மீண்டும் படுக்கையில் விழுந்து விட்டாரா?" - பதறிப்போய் கேட்டான் செழியன். ஆமாம்; இனிமேல் அவரால் நடக்கக்கூட முடியாது. ஏனென்றால் முடக்குவாத நோயும் சேர்ந்துகொண்டுவிட்டது. இனி அவர் பிழைத் தெழுவதே அரிதுதான்!" முத்துநகை இவ்வாறு மொழிந்திடவும் செழியன் கன்னப் பரப்பிலே கண்ணீர்வெள்ளம் வழிந்தோடியது. அந்தத் துயரச் சூழ்நிலையில் சில விநாடிகள் வார்த்தைகள் வெளிவந்திடவில்லை எவருக்குமே. சிறிது நேரம் சென்றது. "நான் புறப்படட்டுமா?" என்று மெல்லக் கேட்டாள் ஜூனோ.