உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ன்னன் தன் கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு, எதிரே நிற்கும் புலவரைத் திரும்பத் திரும்பப் பார்த்தான். அவர் புலவரில்லாமல் வேறு யாராகவாவது இருக்கக் கூடாதா என்று தவிக்கின்றான் என்பதை அவனது விழிகள் எடுத்துக் காட்டின. 'குழப்பம்' என்று கூறப்படும் ஒரு நிலை, தனது கொடுமையான வாய்க்குள் கொற்றவனை எடுத்துப் போட்டுக் கொண்டு கூத்தாடியது. எத்தனையோ சிக்கலான பிரச்சினை களையெல்லாம் சரிப்படுத்தி வெற்றி கண்ட மாமன்னன் கரிகாலன், தனக்கெதிரே தமிழ் கூறும் முதுபெரும் அறிஞர் ஒருவர் துரோகியெனும் பெயர் சுமந்து நிற்கின்ற காட்சிக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாமல் துடித்தான்.

முதுகில் காயந்தாங்கிக் களத்திலே வீழ்ந்திடும் வீரனொருவனின் மனோநிலைக்கும், கரிகாலனின் மனோநிலைக்கும் அதிக வேறு பாடில்லை. அந்த வீரன் அனுபவிக்கும் வேதனையைத்தான் அவனும் அனுபவித்தான். தன்னையும் தன் நாட்டையும் வாழ்விக்கும் தமிழ் மொழியை நாவாறப் பாடிக்களிக்கும் பாவலர் ஒருவர், நாட்டுத் துரோகியென்ற பட்டத்துடன் நிற்கின்ற கொடுமையை எண்ணி எண்ணி கண்ணீர் வடித்தான். புலவரிடம் பேசுவதற்கு முயன்றான். தொண்டை அடைத்துக் கொண்டது.

வீரர்கள் அரசனை மரியாதையுடனும், அச்சத்துடனும் வணங்கி, "அரசே! நாங்கள் ஏமாந்து விட்டோம். யவனக் கிழவரைத் தப்பியோடச் செய்துவிட்டு அவரது உடைகளைப் புலவர் அணிந்து கொண்டு யவனக்கிழவர் போலவே வந்திருக்கிறார். எங்களை மன்னித்து விடுங்கள் அரசே!" என்று கதறினார்கள்.

அரசன், அவர்களைப் பார்த்துக் கையமர்த்திப் பேசாமல் இருக்கச் செய்தான். வீரர்கள் விளக்கிக் கூறாமலே என்ன நடந்தது என்பதைக் கரிகாலனால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.

முத்துநகைக்கு உடம்பெல்லாம் நெருப்பாகி விட்டது. கனல் பறக்கும் கண்களுடன் தந்தையின் அருகே வந்தாள். புலவா தன் மகளைப் பரிவுடன் நோக்கிக் கொண்டு நின்றார். முத்துநகை மிக அண்மையில்