சமூகச் சார்புக்கலைகள்
தமிழர் சமுதாயமும் கலைகளும்
பழமையான பண்பாடு மிக்கதாகத் தமிழருடைய சமுதாயம் விளங்குகிறது. இயற்கையுடன் பொருந்திய இயல்பான வாழ்க்கை வாழும் குடியினராகத் தமிழர் பண்டை இலக்கியங் களால் காட்டப் பெறுகின்றனர். பலவிதமான பாகுபாடுகள் சமுதாயத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. இத்தகைய பாகு பாடுகள் நில அடிப்படையில் அமைந்திருந்தன. பல விதமான தொழில்கள் செய்துள்ளனர். மக்களிடத்தில் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்திருக்கும். ஆயினும் அனைவரும் கூடிக் கலந்து கலைகளை ஆதரித்துள்ளனர்.
இசையும் நடனமும் நாடகமும் காலத்துக்குத் தக்கவாறு சிறப்புற்று இருந்தன. பொதுவியலாக நடத்தப்பெற்ற கலைகள் அனைத்து மக்களுக்கும் பொதுவான நாட்டுப்புறக் கலைகளாகவே இருந்திருக்க வேண்டும். குரவைக்கூத்து, துணங்கைக் கூத்து, மல்லாடல் ஆய்ச்சியர்குரவை, குன்றக் குரவை போன்ற கூத்துக்களும், வரிப்பாடல்கள், முகவைப் பாட்டு ஏர் மங்கலம் முதலிய பாடல்களும், வாலசரித நாடகம், வள்ளிக் கூத்து போன்ற நாடகங்களும் நடத்தப்பெற்றுள்ளனவாக அறிகிறோம். மேலும், கொடு கொட்டி, பாண்டுரங்கம், குடைக் கூத்து, பேடியாடல் போன்ற பதினொரு வகை ஆடல்கள் மிகச் சிறப்புற்றிருந்தன. இவற்றிலிருந்து தமிழ் மக்களுடைய கலைப் பற்று நன்கு விளங்கும். பாணர், பொருநர், கூத்தர், விறலியர் போன்ற இனத்தினர் கலைக்குழு அமைத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்திப் பரிசிலும் பாராட்டும் பெற்றுச் சிறந்துள்ளனர்.
மிகவும் நுட்பத் திறனுடன் நடத்தப்படும் சாக்கைக் கூத்து சேர நாட்டில் சிறப்புற்று இருந்ததாகவும் சிலப்பதிகாரத்தின் வாயிலாக அறிய முடிகிறது. இன்று அது பல்வேறு மாற்றங் களுடன் வளர்ந்து படர்ந்து கூடியாட்டம், கதகளி போன்ற திருந்திய கலைகளாகக் கேரள நாட்டில் நடத்தப்படுகிறது. சோழ மன்னர்களின் கல்வெட்டுகளிலும் இத்தகைய சாக்கைக் கூத்தைப் பற்றிய செய்திக் குறிப்புகள் காணப்படுகின்றன. நாட்டுப்புறக் கலைஞர்களிடம் தோன்றிய சாக்கக்ை கூத்து கோயில் கலைஞர்களிடம் வளர்ந்து செழித்து இன்று கேரளக் கலைஞர்களால் சீராக்கம் பெற்று சிறப்பான கலையாக மதிக்கப் படுகிறது.
நா-3