கலைஞரின் சட்டமன்ற உரைகள்
193
ஐயங்கார் என்று சொன்னால்தான் புரியும். அந்த ஜாதிப் பெயரைச் சொல்ல வேண்டியிருந்தது. அதே போல ஜி.டி. நாயுடு என்று சொன்னால்தான் புரியும். அதேபோல ஜி. டி. ஏன் வருகிறார் என்று சொன்னால் புரியாது. ஜாதிப் பெயர்களை மாற்றுவதாகச் சொல்லிக்கொண்டு, சென்னையிலே கூட நுங்கம்பாக்கத்தில் குட்டி மேஸ்திரி தெருவில் மேஸ்திரியை அழித்துவிட்டார்கள். இது இப்போது குட்டித் தெரு என்று இருக்கிறது. சைதாப்பேட்டையில் குயவர் தெருவில் குயவரை அழித்துவிட்டார்கள். வெறும் தெரு என்றிருக்கிறது. அதே போல், பூங்கா நகரில், நான் பேசிய ஒரு பொதுக் கூட்டத்திற்கு எதிரில் அண்ணா பிள்ளை தெரு என்று ஒரு தெரு இருந்தது. அதிலே பிள்ளை என்ற எழுத்தை அழித்துவிட்டார்கள். நான் பேசும்போது சொன்னேன். அண்ணாவிற்கு தமிழ்நாட்டிலே ஆயிரம் தெருக்கள் இருக்கின்றன. அண்ணா பிள்ளைக்கு ஒரே ஒரு தெருதான் இருந்தது. அதையும் கொடுத்து விட்டீர்களே என்று சொன்னேன். அதனால் சில பெயர்களை ஜாதியின் பெயரால் குறிப்பிடும் போதுதான் தெரிந்து கொள்ள முடிகிறது. எனவே, என்னதான் சொன்னாலும் பசும்பொன் முத்துராமலிங்கம் என்று சொன்னால், அது தேவர் திருமகனைக் குறிப்பிடாது என்ற காரணத்தால் பசும்பொன் தேவர் திருமகன் மாவட்டம் என்று அந்த மாவட்டத்திற்கு பெயர் அழைக்கப்படும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்
(மேசையைத் தட்டும் ஒலி.)