உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

55

கடன் 36,000 ரூபாய் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படி வழங்கிய கடனில் ரிசர்வ் பாங்க் கண்டுபிடித்ததில் 1957-இல் செத்தவர்களும் கடன் பெற்றிருக்கின்றனர். செக்ரடரி பழனி தலைவர் வீட்டில் பதுங்கியிருக்கிறார். அதே தலைவருடைய மற்றொரு சொந்தக்காரர் ஆதிகேசவலு நாயுடு என்பவருக்கு கொடுக்க சொசைட்டியில் 8,000-ம், செய்யார் வட்டம் கூட்டுறவு மானேஜிங் சொசைட்டியில் 12,000-ம் கடனாக தானியத்தின் மீது தரப்பட்டது. தானியக்கிடங்கை உடைத்தால் தானியமில்லை. கதவு இருந்தது, பூட்டு இருந்தது, அறை இருந்தது, தானியமில்லை, இல்லாத தானியத்தை உள்ளே இருப்பதாக வைத்துக் கடன் கொடுக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அவர்மேல் ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

அது விசாரணைக்கு வந்தபோது ஸ்டேட்மெண்ட் தரப் பட்டது. அந்த ஸ்டேட்மெண்டில் தலைவர் சொன்னார். 'நான் கார் வாங்க அந்தப் பத்தாயிரத்தை எடுக்கச் சொன்னேன்! பிறகு கார் வாங்குகிற தீர்மானத்தைக் கைவிட்டு விட்டேன்' என்று. அந்த சொசைடியின் செயலாளர் சொன்னார், 'ஜவுளிக் கடை வைக்க வேண்டுமென்று பத்தாயிரம் எடுக்கச் சொன்னார்! பிறகு வைக்க வேண்டாமென்று திருப்பிப் போட்டு விட்டோம்' என்று. கார் வாங்கப் பணம் எடுத்தது உண்மையா; அல்லது ஜவுளிக் கடை வைக்கப் பணம் எடுத்தது உண்மையா அல்லது காங்கிரஸ்காரர் என்பதற்காக அவர்மேல் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது உண்மையா என்பதைத் தங்கள் மூலமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இது மாத்திரமல்ல; நண்பர் ஏ.எல்.சி. கிருஷ்ணசாமி அவர்கள் துண்டு வெளியீடுகள் வெளியிட்டு கனம் அமைச்சர் ராமையா அவர்கள் அங்கு சென்றிருந்தபோது அவற்றை அவரிடமும் கொடுத்து நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ள வேண்டுமென்று கொடுத்தார். ஆனால் குற்றவாளி கைது செய்யப்படவில்லை; ஆனால் குற்றங்களைச் சுட்டிக் காட்டிய பரிதாபத்துக்குரிய நண்பர் கிருஷ்ணசாமி அவர்கள் கைது செய்யப்பட்டு பிறகு ஜாமீனில் வெளியே வந்தார்கள். இது நிலைமை. அரசாங்கத்திற்கு வேண்டியவர்கள் தவறு செய்தால் ஏன் மன்னிக்கப்படுகிறார்கள்?