160
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : நீங்கள் மாத்திரம்தான் துச்சம் என்று மதிக்கிறீர்களா? நாங்கள் என்னவோ இதைவிட்டால் வேறு வழியே இல்லை என்று இருப்பவர்கள் அல்ல. பொது மக்களின் கட்டளையை நிறைவேற்ற நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். பதவி என்பது பணிபுரிய அளிக்கப்பட்டிருக்கிற வாய்ப்பே அல்லாமல் வேறு அல்ல. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு ஜனநாயகக் கடமைகளை நிறைவேற்ற இங்கே நாங்கள் அமர்ந்திருக்கிறோம். ஆகவே நல்லெண்ணத்தின் அடிப்படையில் சொன்னேனேயல்லாமல் பொன்னப்ப நாடார் அவர்களை மிரட்டுவதற்கோ அல்லது எச்சரிப்பதற்கோ என்று கொள்ளக்கூடாது. அவர்கள் கடைசியிடத்தில் உட்கார்ந்து கொண்டாலும் பதவியை நாங்கள் துச்சமாக மதிக்கிறோம் என்று சொல்ல உரிமை படைத்தவர்களாக இருப்பதைப்போல் இந்த அமைச்சரவையில் இருந்து யாராவது அல்லது ஆளும் கட்சி உறுப்பினர்கள் நிலையிலிருந்து இங்கிருந்து விரட்டப்பட்டாலும்கூட அவர்களுக்கு மக்கள் இதயத்தில் நிச்சயமாக இடம் இருக்கிறது என்பதைமட்டும் யாரும் மறந்துவிடக்கூடாது. (ஆரவாரம்) திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் கூறியதற்கு நான் இந்தப் பதிலே அளிப்பதற்கு மிகுந்த கடமைப்பட்டிருக்கிறேன்.
இந்த நம்பிக்கை கோருகிறே தீர்மானத்தில் நான் ஆரம்பத்தில் சொன்னதைப்போல் இப்போது அதிக நேரம் பேசுவதற்கு விரும்பவில்லை, ஆளும் கட்சி உறுப்பினர்கள், தோழமைக் கட்சிகளின் உறுப்பினர்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேச இருக்கிறீர்கள். நாம் இந்த மன்றத்தின் மரபினை போற்றி காப்பாற்றிவருகிற வகையில் நம்முடைய விவாதங்கள் பண்போடும் நாகரீகத்தோடும் நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்கவேண்டுமென்று கேட்டுக்கொண்டு நம்பிக்கை கோருகிற இந்த தீர்மானத்தை இந்த அவையில் முன்மொழிந்து நான் அமர்கிறேன். வணக்கம்.