442
அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது
பிறகு ஆறாவதாக, ட்ராக்டர். என்னுடைய நிலத்திற்கு லண்டனிலிருந்து கொடுத்த ட்ராக்டரைக் கொண்டுபோய் திருவாரூர், காட்டூரில் நிலத்தை உழுதேன் என்பது ஒரு குற்றச்சாட்டு, லண்டனிலிருந்து கொடுத்தவுடனே அதை நான் கோவை விவசாயக் கல்லூரிக்கு பரிசாகத் தந்து விட்டேன். அது சென்னை துறைமுகத்திற்கு வந்து சேர்ந்த உடன் கோவைக்குச் சென்று நானும், கவர்னர் ஷா அவர்களும், மற்ற அமைச்சர்களும் சென்று அதைப் பரிசாகத் தந்துவிட்டோம், அங்கு நடைபெற்ற ஒரு விழாவில்.
ஆனால் அது திருவாரூருக்கு கொண்டுசெல்லப்பட்டது என்பது புகார். அந்த விவகாரங்களுக்குள் நான் நுழைய விரும்பவில்லை. திருவாரூரில் எனக்கு 12 ஏக்கர் நிலம் இருக்கிறது, 12 சாதாரண ஏக்கர், ஸ்டான்டர்டு ஏக்கர் அல்ல. இந்த 12 ஏக்கர் நிலத்தை உழுவதற்கு டிராக்டரால் உழ வேண்டும் என்றால் ஒரு நாள் வேண்டும். அதற்கு சென்னையிலிருந்து ஒரு டிராக்டரை எந்த முட்டாளும் - காலையில் நமது நிதி அமைச்சர் அவர்கள் சொன்னார்களே - ‘ஸ்டுபிடிடி' என்று - அதைப்போல் - எந்த முட்டாளும் சென்னையிலிருந்து 250 மைல் அளவுக்கு ஒரு டிராக்டரை திருவாரூருக்குக் கொண்டு செல்ல மாட்டான். அங்குள்ள பஞ்சாயத்து யூனியனிலே 40 ரூபாய் நாள் ஒன்றுக்கு வாடகை கொடுத்தால் எளிதாக வாங்கி கொள்ள முடியும். இதில் சர்க்காரியா என்ன எழுதுகிறார். . .
I hold that allegation (SI. No. 3) has not been substantiated.
இது நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இன்னொன்றை அதில் சர்க்காரியா எழுதியிருக்கிறார். "இந்த நிலத்தில் டிராக்டர் ஒன்று உழுதிருக்கிறது, அது லண்டன் டிராக்டர் ஆக இருக்கலாம்"... முதலமைச்சருக்கு சாதகமாக சொல்லியிருக்கிறார். நம்முடைய முதலமைச்சர் என்னுடைய நிலம் இருக்கின்ற காட்டூருக்கு வந்திருக்கிறார். ஆனால் என்னுடைய நிலத்தைப் பார்த்தது கிடையாது. அப்படியிருக்கும்போது அங்கு ஏதோ ஒரு டிராக்டர் உழுதிருக்கிறது, அதைப் பார்த்துவிட்டு லண்டன் டிராக்டர் என்று எண்ணியிருக்கலாம் என்று எதை நினைத்துக்கொண்டு சர்க்காரியா எழுதினாரோ தெரியவில்லை.