கலைஞரின் சட்டமன்ற உரைகள்
507
உரை : 74
கண்டனத் தீர்மானம்
நாள் : 30.10.1979
கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே! அமைச்சரவையின் கொள்கையைக் கண்டிக்கிற தீர்மானம் இங்கே மொழியப்பட்டு விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது நான் தங்களுடைய மேலான கவனத்திற்கு ஒன்றைக் கொண்டு வர விரும்புகிறேன். 26ஆம் தேதி நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுவில் தாங்களும், அவை முன்னவர் அவர்களும், மின்சாரத்துறை அமைச்சர் அவர்களும், மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களும் கூடிக் கலந்து பேசி 27,29,30 ஆகிய இந்த மூன்று நாட்களுக்குள் இந்தக் கண்டனத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை முடித்துவிட்டு அதற்குரிய பதிலை முதல் அமைச்சர் அவர்கள் சொல்வார்கள். அதன்பிறகு கண்டனத் தீர்மானம் பற்றிய முடிவு, வோட்டெடுப்புகள் நடைபெறும் என்ற அளவில்தான் அன்று நாம் பேசி முடித்தோம். அலுவல் ஆய்வுக் குழுவில் எங்களுக்கிருக்கிற சங்கடமெல்லாம் எங்களுக்கு மாத்திரமல்ல. உங்களுக்கும் கூடத்தான், அவை முன்னவர் அவர்களுக்கும்கூட இருப்பதாக நான் உணருகிறேன். அலுவல் ஆய்வுக் குழுவிற்குப் பொதுவாக, கடந்த காலங்களில் திரு.பக்தவத்சலம் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோதும், அண்ணா அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோதும், நான் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தபோதும், அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டங்களுக்குச் செல்வது என்பதை, ஒரு மரபாக அல்லது முறையாக வைத்திருந்தோம். ஏனென்றால், அது அலுவல் ஆய்வுக்குழுவிற்கு வருகிற கட்சிகளையெல்லாம் மதிக்க வேண்டும் என்பதற்காகக்கூட அல்ல, அவரவர்கள் நிகழ்ச்சி நிரல்கள் எப்படி எப்படி அமைந்திருக்கின்றன. எனவே எந்தெந்த தீர்மானங்கள் அல்லது எந்தெந்த மானியங்கள் அல்லது