30
காவல்துறை பற்றி
கலந்துகொண்டு உரையாற்றுகின்ற நேரத்தில், அமைச்சர்களும், மற்றவர்களும், போலீசாரை இந்த அளவுக்குப் பாராட்டி உங்கள் பக்கம் இழுத்துக்கொள்ள எண்ணுகிறீர்களா என்று கூடக் கேட்டார்கள். நான் பாராட்டுரைகளை வழங்கிவிட்டு, இருக்கிற குறைபாடுகளையும் அப்போதே எடுத்து உரைத்தேன். நாங்கள் நல்லவைகளைப் பாராட்டவும் செய்வோம்: தீயவைகளைக் கண்டிக்கவும் செய்வோம். அதுதான் ஒரு நாணயமான எதிர்க் கட்சிக்கு உரிய இலக்கணம். அந்த நாணயமான இலக்கணத்தின் அடிப்படையிலேதான் இன்றையதினம் இந்த விவாதத்திலே கலந்துகொண்ட திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் தங்கள் எண்ணங்களை இந்தக் கருத்தரங்கிலே எடுத்துக் கூறியிருக்கிறார்கள். ஆகவே, போலீஸ் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டதுபோல் அதிலே எந்தவிதமான முரண்பாடான கருத்துக்களும் இல்லையென்பதை நான் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.
போலீஸ் இலாகா 35,000 பணி புரிகின்ற ஒரு பெரும் இலாகா. இந்தப் போலீஸ் இலாகாவில் ஏறத்தாழ, 25,000 கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். இவர்களுடைய குறைபாடுகள் இந்த மானியத்தின் மூலமாக நீக்கப்பட வேண்டுமென்கிற கருத்தினை ஒட்டித்தான் இந்த வெட்டுப் வட்டுப் பிரேரணை கொடுக்கப்பட்டிருக்கிறது. மாமன்றத்தின் மரபின்படி வெட்டுப் பிரேரணை என்று குறிப்பிட்டாலும் அளிக்கப்பட்டுள்ள 8,20,22,000 ரூபாவிலிருந்து தொகையைக் குறைக்க வேண்டுமென்பதல்ல பொருள். வெட்டுப் பிரேரணை என்பதை ஒட்டுப் பிரேரணை என்று திருத்திக்கொண்டால் கூடப் பொருத்தமாக இருக்கும். மேலும் மானியத்தொகையை அதிகரித்து போலீஸ் அதிகாரிகள் போலீஸ் கான்ஸ்டபிள்கள் ஆகியோருக்கு வசதிகளைப் பெருக்க வேண்டும்; வாய்ப்புக்களை அதிகமாக ஆக்கவேண்டும் என்பதற்காகத்தான், இந்தக் கருத்துரைகளை நாங்கள் எடுத்துச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.
தமிழகத்திலே இருக்கின்ற போலீஸ் இலாகா மற்ற மாநிலங்களில் இருக்கின்ற இலாகாக்களை விடச் செவ்வனே பணிபுரிந்துவருகின்ற இலாகா என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த சிறப்புப் பெயருக்குத் தமிழக போலீஸ் இலாகா தன்னை உரிய இலாகாவாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. கடந்த முறை