கலைஞரின் சட்டமன்ற உரைகள்
383
மனப்புகைச்சல் இன்றளவும் நீங்காமல் அப்படியே நீடித்து வருகிறது. அதன் காரணமாகத்தான் இரு சாராருமே பறக்கும் படைகளை உருவாக்கிக்கொண்டு பறந்து கொண்டிருக்கிறார்கள். நம்முடைய காங்கிரஸ் கட்சியினுடைய துணைத் தலைவர் மிகுந்த பதட்டத்தோடு ஜாதிக்கு ஜாதி பறக்கும் படைகளை வைத்துக் கொள்ளலாமா, என்று கேட்டார்கள். நான் நிச்சயமாக இந்த மன்றத்தில் உறுதி கூறுகிறேன். துறையின் அமைச்சர் என்ற முறையில், ஆளும் கட்சியினுடைய தலைவன் என்ற முறையில், ஆணவத்தோடு அல்ல; நாட்டில் ஏற்பட்டுவிட்ட இந்த ஜாதிக் கொடுமைகளால் விளைகிற இது போன்ற போராட்டங்களைத் தவிர்த்திட வேண்டும்; தடுத்திட வேண்டும். யாரோ என்றைக்கோ உருவாக்கிய இந்த நிலை; வருணாசிரமம் என்ற பெயரால் தமிழகத்திலே இன்றைக்கு வேர் ஊன்றிப் போய், யாரோ, செய்த சதிக்கும் கால் முளைத்து; அந்த சதி இன்றைய தினம் நாட்டிலே ரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிற ஒரு பயங்கர நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதை மேலும் தூண்டிவிடுகிற வகையில் ஜாதிக்கு ஜாதி, பறக்கும் படைகளை ஏற்படுத்திக் கொண்டு மேலும் நாட்டிலே அமளி ஏற்படுத்த யார் முன் வந்தாலும் அரசு அதைப் பார்த்துக் கொண்டிருக்காது.
பறக்கும் படை என்ற பெயரால் அது யாருடைய பெயரால் அந்தப் படை வைக்கப்பட்டு இருந்தாலும், எந்த ஜாதியின் பெயரால் அந்தப் படைகள் இயங்கினாலும் அவைகள் அத்தனையும் தடை செய்யப்படும் என்பதை இந்த மாமன்றத்தில் நான் உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்தப்பகை வளர்ந்து, வளர்ந்து, கிருஷ்ணாபுரம் பகுதியில், தொடங்கிய ஜாதிக் கலவரம் இராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூருக்குப் பரவி மொத்தம் 11 பேர் மரணம் அடைந்திருக்கிறார்கள். அதிலே எந்தெந்த வகுப்பிலே எவ்வளவு, எவ்வளவு என்று சொல்லக்கூட நான் விரும்பவில்லை. அதன் காரணமாக, "ஓகோ, இன்னும் நான்கைந்து பாக்கி இருக்கிறது" என்று அதை ஈடுகட்ட யாராவது முயற்சித்தால் என்ன செய்வது என்ற இதய வேதனையோடு நான் அதை மறைக்க விரும்புகிறேன். 11 பேர் அங்கே இறந்து இருக்கிறார்கள். எந்த வகுப்பு என்றால் இரண்டுபேரும் தமிழர்கள் தான். தமிழர்கள் 11 பேர் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக்