கலைஞரின் சட்டமன்ற உரைகள்
387
எங்கே நியாயம் இருந்ததோ அந்த நியாயத்திற்காக வாதாடியிருக் கிறோம். திண்டுக்கல் சட்டமன்ற.... (குறுக்கீடு).
திரு. எம். அப்துல் லத்தீப் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் நாட்டிலுள்ள பொதுவான நிலைமைகளை குறித்த பொதுக் கருத்தைத்தான் தெரிவித்தேன். குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இப்போது தான் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறது என்பதும் எனக்குத் தெரியும். தி. மு. க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதற்கு பிறகுதான் ரகசிய துறைக்கு ஒரு முஸ்லீம் நியமிக்கப்பட் டிருக்கிறார். பழைய நிலை மாறி புதிய நிலை உருவாகியிருக்கிறது என்பதையும் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அரசாங்கத்தை மட்டும் நான் சுட்டிக்காட்டவில்லை. பொதுவாக நாட்டிலுள்ள நிலையைத்தான் பொதுவாகச் சொல்கிறேன்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நன்றி.
திரு. சா. பீட்டர் ஆல்போன்ஸ் : மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நான் ஏற்கெனவே சொன்னேன். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பேசும்போது கூட ஒரு முஸ்லீமை தேடிப்பிடித்து கலெக்டராக நியமனம் செய்தோம் என்று சொன்னார்கள். மாவட்டத்தில் பொறுப்பில் இருக்கிற அதிகாரிகளை, ஜாதி, மதம் ஆகிய நோக்கில் பார்க்கக் கூடிய ஒரு கலாச்சாரத்தை நாம் புகுத்தக்கூடாது. இந்தக் கருத்துக்களை வெளியே பேசும்போது நாம் வேண்டுமானால் முதலமைச்சரிடம் நேரில் சொல்லலாம். நான்கூட ஒரு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவன். இதிலே கோளாறு இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் இந்த அவையிலே நாம் பேசும்போது ஓகோ இப்படி எல்லாம் பெரிய அதிகாரிகளை நியமிக்கிறார்களோ என்ற கருத்து மக்கள் மத்தியிலே வரும் என்று சொன்னால், இந்த அவை மீதும் இந்த அவையிலே மிகப் பெரிய பொறுப்பிலே இருக்கிற நம் மீதும் மக்களுக்கு ஒரு சந்தேகம் வரும் என்பதை நான் இந்த அரசின் கவனத்திற்குக் கொண்டுவர ஆசைப்படுகிறேன்.