கலைஞரின் சட்டமன்ற உரைகள்
467
குறை என்பதல்ல. ஒரு துப்பாக்கி பிரயோகம் கூட நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பெரும் பொறுப்பு காவல் துறைக்கு மாத்திரமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் இருக்கிறது. சமுதாயத்தினுடைய தலைவர்களுக்கும் இருக்கிறது. இன்றைக்கு எப்படியோ, வேறு வழியில்லாமல், என்ன காரணத்தினாலோ ஜாதிகள், அவைகளைக் கட்டிக் காப்பாற்றக்கூடிய தலைவர்கள் அந்த ஜாதியின் பெயரால் இன்றைக்கு உருவாகியிருக்கக்கூடிய சூழ்நிலை, நாம் மறுக்க முடியாத அளவிற்கு இருக்கிறது என்பதை மறைக்கவும் நான் விரும்பவில்லை. அதன் காரணமாக, இங்கே பேசிய நேரத்திலே கூட சில வாக்குவாதங்கள் எல்லாம் ஏற்பட்டன. ஜாதி என்பது தமிழர்களுக்கு அவர்களுடைய அகராதியிலே இல்லாத ஒன்று. தமிழ் அகராதியிலே, இப்போது வந்த அகராதியிலே இருக்கலாம். அந்தக் காலத்து அகராதியிலே ஜாதி கிடையாது.
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"
என்றுதான் வள்ளுவர் பாடினார். அந்தச் செய்தொழில் வேற்றுமை கூட அவர் தச்சர், இவர் குயவர், இவர் கருமான் என்று இந்த வகையிலே உள்ள செய்தொழில் அல்ல. எந்த ஒரு தொழிலை செய்தாலும், எழுத்தராக இருக்கலாம், அவர் தச்சராக இருக்கலாம். அவர் ஒரு குமாஸ்தாவாக இருக்கலாம். அவர் செய்கின்ற அந்தத் தொழிலில், அந்தக் குமாஸ்தாக்களில் யார் சிறப்புடையவரோ அவர்தான் உயர்ந்தவரே தவிர, 'சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்' என்று வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தமிழ் அகராதியிலே இல்லாத ஜாதி வந்து புகுந்த சதியின் காரணமாக, சதிக்குக் கால் முளைத்து அது சாதியாக மாறி இருக்கிறதே தவிர வேறல்ல. (மேசையைத் தட்டும் ஒலி). எனவே, அந்தச் சதியை வீழ்த்த, சாதியை வீழ்த்த, சாதி வேறுபாட்டை வீழ்த்த, பேதத்தை வீழ்த்த, சாதிச் சண்டைகளை வீழ்த்த, மதபாத வெறித்தன்மைகளை வீழ்த்த, மதச்சார்பற்ற ஒரு நிலை சமுதாயத்திலே உருவாக, சாதி சார்பற்ற நிலை, நாம் எல்லாம் ஒரு குலம், ஒன்றே குலம் என்கின்ற அந்த உண்மை ஒளி நம்முடைய உள்ளத்திலே எற்பட அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக் கொண்டாலொழிய, சட்டத்தால் அல்லது காவல் துறையால் அவர்களுடைய செயலாக்கத்தால் மாத்திரம் சாதிச் சச்சரவுகளை நாம் அகற்றிட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.