கலைஞரின் சட்டமன்ற உரைகள்
631
வீட்டு வசதி வாரியத்தின் சார்பாகக் கட்டப்பட்ட வீடுகளைப்பற்றி இங்கே சொல்லப்பட்டது. அம்மையார் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுடைய ஆட்சியில் 1991 முதல் 1996 வரை 48 கோடி ரூபாய் செலவில், 3,001 குடியிருப்புகள் கட்டப்பட்டன, காவலர்களுக்காக. 1996 முதல் 2000 வரை திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நான்கு ஆண்டுகளில் 190 கோடி ரூபாய் செலவில் 12,602 குடியிருப்புகள் கட்டப்பட்டன. (மேசையைத் தட்டும் ஒலி).
காவல் துறை நிர்வாக வசதிக்காக, பெரிய மாவட்டங்களைப் பிரித்து, இரண்டு காவல் மாவட்டங்களாக உருவாக்கியதும், கழக ஆட்சியிலேதான். 1973ஆம் ஆண்டு, முதன்முதலாக மகளிரை, காவல் துறையிலே சேர்ப்பதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க ஆணையைப் பிறப்பித்ததும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான். (மேசையைத் தட்டும் ஒலி). அன்றைக்கு, திரு. அருள் அவர்கள் I.G.-ஆக இருந்த காலத்தில், இந்த அருமையான சாதனையை நிறைவேற்ற முடிந்தது. அதனுடைய தொடர்ச்சியாக, இன்றைக்கு ஆயிரக்கணக்கானவர்கள், அனைத்து மகளிர் காவல் இல்லங்கள் இவையெல்லாம் வந்து இருப்பதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன். இவையெல்லாம், ஒரு ஆட்சியினுடைய படிப்படியான வளர்ச்சி என்பதை யாரும் மறுக்க முடியாது; பாராட்டாமல் இருக்கவும் முடியாது. நீங்கள் செய்தீர்கள் என்பதற்காக, அந்த அம்மையார் செய்தார்கள் என்பதற்காக அதை, அருவருக்கிற, அதைப்பற்றித் தவறாக் கூறுகின்ற, தரங்கெட்டவன் அல்லன் நான் என்பதையும் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன். (மேசையைத் தட்டும் ஒலி).
காவலர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக, காவலர் கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட்டதும், திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலேதான். (மேசையைத் தட்டும் ஒலி). தமிழ்நாடு காவல் துறை, இந்த ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், மாநிலத்திலே சட்டம்-ஒழுங்கை, எந்தவொரு தொய்வும் இல்லாமல், இப்போது பாதுகாத்து வருவதை அனைவரும் அறிவீர்கள். மாநிலம் முழுவதும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் மிகுந்த கவனம் செலுத்தி, ஆங்காங்கே குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ரவுடிகள், கொள்ளையர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள் மற்றும்