கலைஞரின் சட்டமன்ற உரைகள்
உ
645
Collector-ஐ. ‘அவருக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்று உறுதி அளிக்கப்படுகிறது; மேலும், பணயமாகப் பிடித்து வைக்கப் பட்டிருப்பவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டு செல்லத் தடையும் இருக்காது. அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன' என்று கோவை Collector சொல்கிறார்.
நிருபர் கேட்கிறார், Collector-ஐ. ‘வீரப்பனுடைய தூதுவன் வர, அரசுத் தரப்பில் வாகன வசதி செய்து கொடுக்கிறீர்களே! அந்த நிலையிலே, தூதுவன் துப்பாக்கியுடன் வந்து பேசுகிறானே! இது சரியா?' என்று கேட்கிறார் அந்த நிருபர். Collector சொல்கிறார்: 'அவர் சொந்தப் பாதுகாப்புக்குத் துப்பாக்கியோடு வருகிறார்; காரணம், அவர் காட்டுக்குள் போகிறார் வருகிறார். எனவே துப்பாக்கி ஏந்துகிறார். அது தவறில்லை' என்று கோவை மாவட்ட Collector சொல்கிறார்.
அவர்தான் அப்படிச் சொன்னார் என்றால், அப்போது தலைமைச் செயலாளர் யார் தெரியுமா? ஹரி பாஸ்கர். அவர் சொல்கிறார்: 'சிறையிலே உள்ள வீரப்பன் கோஷ்டியை, அவருடைய தளபதி பேபி பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும்; இந்தக் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்து வருகிறது; இப்போது மிக முக்கியமான முன்னுரிமை, கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளையும், மற்றவர்களையும் மீட்பதுதான்; விசேஷ அதிரடிப்படைகள் நிறுத்தப்பட்டுவிட்டன; அந்தப் படைகளை அனுப்பினால், வீரப்பன், போலீஸ் அதிகாரிகளையும், மற்றவர்களையும் கொன்றுவிடக்கூடும்; ஆகவே, வீரப்பனைத் தேடும் படலத்தைத் தற்காலிகமாக ஒத்திவைத்திருக்கிறோம்' என்று ஹரி பாஸ்கர், தலைமைச் செயலாளர் சொல்கிறார் என்றால், இதற்கு என்ன பொருள்? ஆகவே, வீரப்பன் பிடிபட்டதிலே யாருக்கும், இந்த அவையிலே உள்ள யாருக்கும், எந்தவிதமான வருத்தமும் கிடையாது. மகிழ்ச்சியடைய மாட்டோம் என்று சொல்கின்ற யாரும் இங்கே இல்லை. ஆனால், இதை வேண்டு மென்றே ஒரு வீரப் பிரதாபமாகக் கருதிக்கொண்டு, மற்றவர்கள் மீது பழி சுமத்துகின்ற காரியத்திலே எதிர்க்கட்சிக்காரர்கள் ஈடுபடவேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.