உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

21


நிறம் என்று கேட்க? குடிசை மன்னர்களுக்கும் ராணிகளுக்கும்தான் தங்கள் வறுமை ராஜ்யத்தில் இன்பத்துக்காக ஒரு சில நிமிடங்கள்கூட ஒதுக்க முடியவில்லை. கடன்காரர் படையெடுப்பு; தயிர்க்காரி முற்றுகை- இவ்வளவையும் சமாளித்துவிட்டு இரவு, கருணை கூர்ந்து தருகிற சில மணி நேரங்களில் கர்ம வினையை நினைத்துப் புலம்பவும்-கடவுளை எண்ணி அழவும், போனது போக, மிச்ச நேரத்தை எப்போதாவது பயன்படுத்திக் கொள்ளலாம். அதுவும் ஏழை சாம்ராஜ்யத்தில் பிரஜைகள் அதிகம். ஏழெட்டுக் குழந்தைகளுக்குக் குறையாது. ஏழாவது குழந்தை முதல் குழந்தையைவிட ஆறு வயதுதான் இளையதாயிருக்கும். கருணாம்பாளைப் போலக் காசைத் தூசியாக மதித்துக் கர்ப்பப்பையை மாற்றிப் போட வசதியா படைத்திருக்கிறார்கள் அந்தப் பரிதாப ஜந்துக்கள்!

இளமை தேயாதவன்; எழில் குறையாதவன். இப்பேர்பட்டவனைத்தான் பார்வதி கணவனாகப் பெற்றிருந்தாள். அவன் மில் வேலை முடிந்து ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்திருப்பான். அவனை வரவேற்று உபசரிக்க அவளுக்கு வேலை ஒழியவில்லை. எஜமானுக்கும் எஜமானிக்கும் தேவையான ஓய்வுக்காக-அந்த ஏழையின் இளம் மனைவி-பார்வதி-தன் பருவ உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு பானுவைப் ‘பார்க்கு’க்குஅழைத்துச் சென்றாள். ஒருநாள் மட்டுமா? இல்லை.நாள்தோறும். அவள் பெண்ணல்ல; இந்த உலகத்தில் ஒரு மாடு பகல் முழுவதும் எலும்பு முறிய உழைப்பதுபோல வீட்டு வேலைகள். அவளுக்கு. எஜமான் மாளிகைதானே வீடு! மாலையில் சூரியனுக்குக்கூட வேலை முடிகிறது. ஆனால் பார்வதிக்கு..? இதை அவளால் நினைக்கத்தான் முடியவில்லை. நெஞ்சைத்தான் படைத்தானே- அந்த நேர்மையற்றவன்-வயிற்றையும் ஏன் படைத்தான்?