உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திராவிட இயக்க எழுத்தாளர் சிறுகதைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கலைஞர் மு. கருணாநிதி

கலைஞர், கவிஞர், சிறுகதை மற்றும் புதின எழுத்தாளர், நாடகாசிரியர், நடிகர், அரசியல் தலைவர், ஆட்சியாளர் என எல்லாவற்றிலும் முத்திரை பதித்த தமிழக முதலமைச்சர் கலைஞர் திருவாரூரை அடுத்த திருக்குவளையில் 3-6-1924-ல் பிறந்தவர்.

‘முரசொலி’ (வார பின் நாளிதழ்), ‘முத்தாரம்’, ‘மறவன் மடல்’, ‘நம்நாடு’ (வார இதழ்கள்) இவற்றின் ஆசிரியராகவும், ‘மாலை மணி’ நாளிதழ் ஆசிரியராகவும், பெரியாரின் ‘குடியரசு’ இதழின் துணையாசிரியராகவும் பணியாற்றியவர்.

‘கவிதையல்ல’, ‘கலைஞரின் கவிதைகள்’, ‘கலைஞரின் கவியரங்கக் கவிதைகள்’ இவரது கவிதைத் தொகுப்புகள். ‘முத்தாரம்’ என்ற சொல்லோவியம் அரிய கருத்துக்கோவை; சிந்தனை விருந்து.

‘கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்’, ‘கண்ணடக்கம்’, ‘அரும்பு’, ‘வாழமுடியாதவர்கள்’, ‘சங்கிலிச் சாமி’, ‘தப்பிவிட்டார்கள்’ முதலிய 15-க்கு மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், ‘புதையல்’, ‘வெள்ளிக் கிழமை’, ‘சுருளிமலை’, ‘ரோமாபுரிப் பாண்டியன்’, ‘தென்பாண்டிச் சிங்கம்’, ‘பொன்னர் சங்கர்’ முதலிய பத்துக்கு மேற்பட்ட புதினங்கள், வரலாற்றுப் புதினங்கள், ‘தூக்குமேடை’, ‘ஒரே முத்தம்’, ‘மணிமகுடம்’, ‘சிலப்பதிகார நாடகக் காப்பியம்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’ போன்ற 15 க்கு மேற்பட்ட நாடகங்கள், ‘பராசக்தி’, ‘மந்திரிகுமாரி', ‘மருதநாட்டு இளவரசி’, ‘மனோகரா’, ‘காஞ்சித் தலைவன்’, ‘பூம்புகார்' முதலிய 50 க்கு மேற்பட்ட திரைப்படங்கள் இவரது படைப்புகள். படங்களுக்குப் பாடல்களும் எழுதியுள்ளவர் இவர், திரைப்படங்களில் ஓரங்க நாடகங்களைப் புகுத்தி, அவற்றுக்குப் பெருமை சேர்த்தவர் கலைஞர்.

‘குறளோவியம்’, ‘சங்கத் தமிழ்’, ‘நெஞ்சுக்கு நீதி’ (வாழ்க்கை வரலாறு) எப்போதும் அவர் புகழைப் பறைசாற்றும். ‘உடன்பிறப்பே’ எனத் தினசரி இவர் எழுதும் ‘கலைஞர் கடித’ங்கள் அரசியல் தத்துவங்கள்; உலகில் எந்த அரசியல் தலைவரும் செய்யாத அரிய சாதனை!

தமிழில் மிக அதிகமாக எழுதியுள்ளவர் என்ற சிறப்பு கலைஞருக்கு மட்டுமே உண்டு.