உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கோமளத்தின் கோபம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோபம்

41

சென்னை முழுவதும் ஒட்டப்பட்டது. அதற்காக லிங்கத்துக்குச் செலவு இருநூறு ரூபாய். ஆனாலும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேலாகச் செலவிட்டாலும் வராத அளவு ஆனந்தம். பழி தீர்த்துக் கொண்டோம். இனி அவள் வெளியே தலை நீட்ட முடியாது. ஒழிந்தது அவள் பணம். மீதமிருப்பது அவளுடைய டம்பத்துக்குக் காணாது; செல்வாக்கு அற்றுவிட்டது. செத்தாள் அவள்— என்று எண்ணி எண்ணி மகிழ்ந்தான்.

இவ்வளவு நடந்தும் பாஸ்கரனின் மனம் மாறவில்லை. முன்னைவிட மோகம் அதிகரித்தது. கோமளமும், உலகம் தன்னை இனி வெறுத்து ஒதுக்கும் என்பதை நன்கு தெரிந்து கொண்டதால் பாஸ்கரனையும் விட்டு விட்டால் வீதியில் திண்டாட வேண்டி வரும் என்பதைத் தெரிந்து கொண்டு, அவனிடம் அளவற்ற ஆசை கொண்டவள் போல நடித்தாள். குடும்பமோ பெருத்துவிட்டது. வரதாச்சாரியின் மனைவி, குழந்தைகள், கோமளத்திடம் வந்து விட்டனர். இந்நிலையில் பாஸ்கரனின் தந்தை இறந்துவிட்டார். இந்த துக்கச் சேதி கோமளத்துக்கு புதிய ஆனந்தத்தைக் கொடுத்தது. ஏனெனில், பாஸ்கரன் தந்தையின்கீழ் பிள்ளையாக இருந்ததால் அதிக தாராளமாக பணத்தை இறைக்க முடியாதிருந்தான். தந்தை போனபின், பாஸ்கரனே ஜெமீன்தார். எனவே இனி கோமளம் ஒரு ஜெமீன் தாரணியன்றோ! பாஸ்கரன் கோமளத்தை ரிஜிஸ்தர் மணம் செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்ய ஆரம்பித்துவிட்டான். இச்சேதி கேட்டு லிங்கம் துடிதுடித்தான். எந்தப் பாடுபட்டாவது இந்த மணம் நடக்க ஒட்டாது தடுத்தே தீரவேண்டும் எனத் தீர்மானித்தான். பாஸ்கரனோ யார் வார்த்தையையும் கேட்கமாட்டான். தன்னை ஒரு பகைவனாகவே கருதிவந்தான். என் செய்வது?


பூ–171–கோ–3