உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாய்ந்தது. பிள்ளையார் இருந்த மேடையின் பக்கம் புயற்காற்றும் மழையும் சண்டமாருதமாக அடித்ததினால், ஆறும் பெருக்கெடுத்து கடல் ஜலத்தை எதிர்த்தது.

பேய் போல் ஆடிக்கொண்டிருந்த மரங்களும் மறுபடி விழுந்து விட்டன. அரச மரம் பிள்ளையார் முதுகின்மேல் சாய்ந்துவிட்டது. வலுவற்ற வேப்ப மரம் முன்போல், பிள்ளையாரின் வயிற்றைச் சுற்றியிருந்த வேரின் உதவியால், மேடையிலிருந்து கொண்டு தண்ணீரில் ஆடிக்கொண்டு இருந்தது.

கைலிக் கிழவனை குடிசையுடன் அடித்துக்கொண்டுபோய்விட்டதால், காற்றுக்கு வளைந்துகொடுத்து மறுபடியும் தலை நிமிர்ந்த ரோஜாச் செடியைத் தவிர அவனுடைய ஞாபகார்த்தமாக வேறு ஒன்றுமில்லை.

பிள்ளையாருக்கு நரகவேதனை பொறுக்க முடியவில்லை.

இந்த மூன்று பிணிகளும் பாசக்கயிறு போல் அவரைத் துன்புறுத்தின.

சமுத்திரத்தின் நடுவில் ஒரு சிறு படகில் சென்றுகொண்டிருந்த ஒருவனைக் கடல் நீர் படகுடன் ஆற்றுக்குள் அடித்துக்கொண்டு வந்ததினால், அந்தப் படகும் இந்தப் பிள்ளையாரின் மேடையை அணுகிற்று. படகினுள் இருந்தவன் பிள்ளையாரின் காலைப் பிடித்துக் கொண்டு மேடையில் தொத்திக்கொண்டான். பிறகு படகையும் மேடையில் இழுத்துப் போட்டுக் கொண்டான்.

வந்தவனுடைய உடம்பு மிகுந்த வெண்மையாகவும் தலைமயிர் உருக்கி வார்த்த தங்கக் கம்பிகள் மாதிரி பொன்னிறமாகப் பிரகாசித்தது. அவனது நீண்ட தாடி பொன்னிறமான ஆபரணம்போல் அவன் மார்பை அலங்கரித்தது. அவன் நீண்ட அங்கியும், கணுக்கால் வரை வரும் தோல் பாதரட்சையும் அணிந்திருந்தான். அவனது வலது கையில் கருப்புத்தோல் அட்டை போட்ட ஒரு பெரிய புத்தகமும் ஒரு நீண்ட சிலுவையும் இருந்தன.

இவனுக்கு வேப்ப மரத்தின் மகிமை நன்றாகத் தெரியுமாகையால் உடனே அதைத் தூக்கி நிறுத்தி, அதன் அடியில் தனது படகை கவிழ்த்துப் போட்டு அதனடியில் படுத்து உறங்கினான்.

அவன் தனக்கு உணவுக்காக வைத்திருந்த ரொட்டித் துண்டுகளை பிள்ளையார் முன் வைத்துவிட்டு உறங்கியதினால், பசியின் கொடுமை மிகுந்த அவர், அவைகளை எடுத்து காலி செய்யவாரம்பித்தார். கொழுக்கட்டை தின்று பழகிய பிள்ளையாருக்கு இது தேவாமிருதமாக இருந்தது. பசி நீங்கிய பிள்ளையார் வலியின் கொடுமையைத் தாங்க முடியாமல் அப்படியே உறங்கிவிட்டார்.

மறுநாள் விடிந்தது.

பிள்ளையார் இருந்த மேடைப்பக்கம் அதிக உஷ்ணமான பூமியாகையால், புதிதாக வந்தவன் தனது நீண்ட அங்கியில் தனது


புதுமைப்பித்தன் கதைகள்

59