உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் நாடகங்கள்.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படித்தோர் உலகு என்றும், பாமரர் உலகு என்றும் இந்த ஒரே உலகில், இருவேறு உலகம் உள்ளன என்கிறார்கள்; மறுப்பதற்கில்லை.

நாகரீக உலகம், கர்னாடக உலகம் என்ற இரு உலகு கொண்டது இந்த ஒரே உலகம் என்கிறார்கள். அதிலும் உண்மை இருந்திடக் காண்கிறோம்.

இவற்றினைப்பற்றி எண்ணிடும்போது, உலகம் என்று நாம் நிலப்பரப்பை மட்டுமே கருதிக்கொள்வதிலே முழுப் பொருத்தம் இல்லை என்பதும், நிலைமைகளும் நினைப்புகளும் எவ்வகையிலே உள்ளன எனபதனைக் கொண்டு இந்தப் பெரிய நிலப்பரப்பிலே பலவிதமான உலகம் உள்ளன என்பதைக் கண்டறிவதே பொருத்தமானது என்பதும் விளக்கமாகிறது.

நிலைமைகளையும் நினைப்புகளையும் கண்டறிந்து பல்வேறு வகையான உலகங்கள் இந்த ஒரே உலகில் இருப்பதனை அறிந்திட முடிகிறது என்பதனை உணரும்போது, ஒவ்வொருவரும் தத்தமது நினைப்பு, நிலைமை ஆகியவற்றினுக்கு ஏற்ற விதத்தில், தமக்கு உரிய 'உலகை' உருவாக்கிக் கொள்ள முடியும் என்பதும் தெளிவாகிறது.

அதனால்தான் வள்ளுவர் 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு' என்று கூறி, நல்ல உலகை நல்லவர்கள் உருவாக்கிக் கொள்ளலாம் என்ற கருத்தினை வழங்கிச் சென்றார்.

ஒவ்வொருவரும் தமது உயர்ந்த எண்ணத்தாலும், சீரிய முயற்சியாலும் ஒரு நல்லுலகம் அமைத்துக் கொள்ளலாம் என்பது போலவே, சிலரோ—பலரோ உருவாக்கிடும் உலகம் வேறு சிலருக்கோ பலருக்கோ 'இடம்' ஆகிவிடுகிறது.

ஆதிக்க வெறிகொண்ட வெள்ளையர்கள், ஆப்பிரிக்க நாட்டினையே அடிமைகளைப் பிடித்திடும் வேட்டைக் காடு ஆக்கினர்; அதிலே கிடைத்த செல்வத்தைக் கொண்டு தமக்குப் பளபளப்பான ஒரு பகட்டு உலகம் அமைத்துக்கொண்டனர்.

வெள்ளையருக்கு ஒரு 'பகட்டு உலகம்' அமைந்ததன் காரணமாகவே, ஆப்பிரிக்கரின் உலகம், 'இருட்டு உலகம்' என்ற நிலையினைப் பெற்றது. பெற்ற பிறகு அதனையே சுட்டிக்காட்டி, பகட்டு உலகினர், இருட்டு உலகினரைக் கேலி செய்திடலாயினர்.

இதுபோல, 'உலகுகளை' உருவாக்கியுள்ளனர்; இருள் உலகினை மட்டுமல்ல, ஒளி உலகினையும்.

315