உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவள் வேறு என்னவாக இருக்க முடியும்? அவள் 'உயர்தரப்' படிப்புப் படித்த பெண்ணா? நாலு விஷயங்களைத் தானாக ஆராய்ச்சி செய்து கொள்ள அவளுக்குத் திறன் ஏது? இயற்கையின் தேவை கட்டுக்கடங்காமல் மீறி ஒரு மிருகத்தின் முரட்டுத் தைரியத்தைக் கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால், அவளை சமூகம் தூற்றுவதற்குத் தயார்.

எந்த அமைப்பிலேயும் விதிவிலக்குகளான சிறுபான்மையோர் கஷ்டப்படத்தான் வேண்டுமென்று தத்துவம் பேசலாம். தத்துவம் நன்றாகத்தான் இருக்கிறது! ஸரஸுவின் உணர்ச்சிக்கு உரிமையில்லை - அவள் விதிவிலக்கு.

ஸரஸு எப்பொழுதும் மாடியின் மேல் காலை ஏழு மணிக்கே தலையை உலர்த்த வருவாள். அப்பொழுதே ஸ்நானமாகிவிடும். பெற்றோரின் பாசம், அவளைச் சமண முனி மாதிரி, பெண்மையின் கோரமாக்கத் துணியவில்லை. அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள். வாழ்க்கைக்கே வசதியில்லாமலிருக்கும் பொழுது சிகை போவதுதானா பிரமாதம்?

அவளைப் பார்த்தால் யாருக்கும் கண் கலங்கும். அவள் கண்களிலே ஒரு நிரந்தரமான துயரம், போக்க வழியில்லாத துன்பம் குடிகொண்டிருக்கும். அவள் சிரிக்கத்தான் செய்கிறாள். குதூகலமாகப் பேசத்தான் செய்கிறாள். இவை யாவற்றிற்கும் பின் சோகந்தான் நிலவும்.

பிரம்மச்சாரியாக, உண்மையான பிரம்மச்சாரியாக நீ இருந்து பார்த்திருக்கிறாயா? வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, உன்னை அப்படியே விழுங்கிவிடாவிட்டால் பிரம்மச்சரியம் உன்னைக் கொன்றுவிடும். உன்னை மிருகமாக்கி உனது உள்ளத்தைப் பேயாகச் சிதற அடித்துவிடும். ஆனால் கட்டாயத்தின் பேரில் இப்படிக் கன்னிகையாகக் காலங்கழிக்க வேண்டிய நிலையை என்ன சொல்லுவது?

அன்று ஸரஸுவின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம். முதலிலே ஸரஸுக்குத் தாங்க முடியாத குதூகலம் - தங்கள் வீட்டிலே விசேஷம் வருகிறது என்றுதான். தம்பியின் மீது இருந்த ஒரு ஹிந்துத் தமக்கையின் அளவு கடந்த பாசத்தினால்.

அன்று பகல் வந்தது...

அன்று இரவு வந்தது. ஊரில் இருள். வீட்டில் ஒளி.

வீட்டில் ஒளி; ஸரஸுவின் உள்ளத்தில்?  அவளுக்கு என்னென்னவோ நினைவுகளெல்லாம் குவிந்தன. அப்படித்தானே மூன்று வருஷங்களுக்கு முன் முதல் முதலாக அவருக்கு... என்னென்னவோ தோன்றின. நேரமாக நேரமாக, அவள் மனத்தில் அந்த மூன்று வருஷங்களுக்கு முந்திய சந்தோஷகரமான, வாழ்க்கையை ஓர் இன்ப ஒளியாக்க முயன்ற அந்த இரவின், ஒவ்வொரு சிறு சம்பவமும்... அவர் முதலில் என்ன கூச்சப்பட்டார்!

புதுமைப்பித்தன் கதைகள்

157