உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிறகு அந்த உரிமை என்ற தைரியம் தானே... இவ்வளவு சீக்கிரம் அவள் வாழ்க்கை இருட்டிவிடும் என்று அப்பொழுது கண்டாளா? என்னவோ சாசுவதமான அழியாத நித்திய வஸ்து வென்றல்லவோ -

துரைசாமியையும் அவள் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றனர். கூச்சலும் அமளியும் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை.

தன்னை மீறிய கட்டுக்கடங்காத ஓர் ஆவேசம் அவளைப் பிடர் பிடித்துத் தள்ளியது. பின்புறம் புழக்கடைக்குச் சென்று விட்டாள்.

நானும் பின் தொடர்ந்தேன். அவள் நிலைமை எனக்கு ஒருவாறு தெரிந்தது. அவள் மீது ஒரு பரிதாபம் அதனால்...

புழக்கடையில் ஒரு பெண் தேம்பிக்கொண்டு இருந்த சப்தம் கேட்டது.

நெருங்கினேன், அவள்தான்!

"ஸரஸு!"

பதில் இல்லை.

இன்னும் நெருங்கித் தோளில் கையை வைத்தேன். உணர்ச்சியற்ற கட்டை போல் இருந்தாள் - உடல் தேம்புவதினால் குலுங்கியது.

"ஸரஸு! நான் இருக்கிறேன் பயப்படாதே" என்றேன்.

"நான் ஒரு ஹிந்துப் பெண்!" என்று கூறிவிட்டுச் சடக்கென்று உள்ளே சென்று விட்டாள்.

நான் திகைத்து நின்றேன். ஹிந்துப் பெண் என்றால் உயிர்வாழ உரிமையில்லையா?...

நான் எவ்வளவு நேரம் நின்றேனோ!

மறுபடியும் அவள் வந்தாள்.

"ஸரஸு! என்னை மன்னித்துவிடு. நான் கூறியது வேறு. நீ அர்த்தம் பண்ணிக் கொண்டது வேறு. நான் உன்னை மணம் செய்து கொள்ளுகிறேன்!" என்றேன்.

"கொள்கைக்காக நீர் தியாகம் செய்து கொள்ள முயலுகிறீர்; அது வேண்டாம் - மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத் தான் நீர் கருதுவீர். அது எனக்கு வேண்டாம். நான் காதலைக் கேட்கவில்லை தியாகத்தைக் கேட்கவில்லை. நான் தேடுவது பாசம்..."

"அது என்னிடம் இருக்கிறது" என்றேன். அவளிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.

"அப்படியானால் திருமணம் வேண்டாம்... பாசம் இருந்தால் போதும்" என்று சொல்லித் தலை குனிந்தாள்.

"என்ன ஸரஸு இப்படிச் சொல்லுகிறாய் - இரகசியம் பாபம் அல்லவா? கல்யாணம் இதை நீக்கிவிடுமே!"


158

வாடா மல்லிகை