அன்று சீமாவிற்கு உதவி செய்த குருட்டு விதி, அவனை அங்கு கொண்டு தள்ளி, மறுபடியும் உதவி என்ற தனது விளையாட்டை ஆரம்பித்தது.
அவனும் அவள் வந்த தெருவில் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான்.
கூட்டத்தை விலக்கிக் கொண்டு அவளிடம் சென்று “ருக்மிணி” என்றான்.
“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள்.
அவள் குரலில் ஒரு சோகம்—நம்பிக்கையிழந்த சோகம்—தொனித்தது.
கண்களில் அவனைக் கண்டு கொண்டதாகக் குறிகள் ஒன்றும் தெரியவில்லை.
“என்னைத் தெரியவில்லையா? என்ன ருக்மிணி நான்தான் வந்திருக்கிறேன்.”
“அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள் மறுபடியும். குரலில் அதே தொனிப்பு.
அவளிடம் விவாதம் செய்யாமல், ஒரு வண்டி பிடித்து அவளை ஏற்றிக் கொண்டு சென்றான்; துக்கம் நெஞ்சையடைத்துக் கொண்டது. என்ன மாறுதல்? கசங்கிய மலர்.
வண்டியில் போகும் பொழுது, மறுபடியும் “அவரைக் கண்டீர்களா? சீமாவிடம் கொண்டு விடுங்கள்” என்றாள்.
சீமாவிற்குப் பதில் பேச முடியவில்லை…
பிறகாவது அவள் அவனைக் கண்டு கொண்டாளோ என்னவோ? எனக்குத் தெரியாது.
மணிக்கொடி 18.11.1934