உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒற்றை வினாடி அமைதியின் பயங்கரத்தை விவரிக்க முடியாது. அப்பொழுதுதான், சப்த கன்னிகைகள், பிரம்ம ராக்ஷஸுகள் இவற்றின் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கை நம்மைப் பன்மடங்கு கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும்.

நான் ஏதோ நினைத்துக்கொண்டு சென்றேன். எவ்வளவு தூரம் சென்றேனோ! இந்தச் சில்வண்டு ரீங்கார அமைதிதான் என்னைச் சட்டென்று நிறுத்தியது. எந்த இடத்திலோ வழி தவறியிருக்க வேண்டும். நான் நின்ற இடத்திற்கு இதுவரை நான் வந்ததில்லை. இருந்தாலும் அவ்வளவு இலகுவில் பாபநாசம் காடுகளில் நான் வழி தவறிவிடக் கூடியவனல்லன்; சிறு பிராயம் முதலே இப்பகுதிகளில் அலைந்து பழக்கம்.

'பார்ப்போம், குடி முழுகிவிடவில்லை!' என்று கையில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பனிரெண்டு. உச்சி நேரம். கடிகாரம் பசியை எழுப்பியது. தண்ணீரையாவது குடித்துப் பசியாறலாம் என்று மேலும் கீழுமாகச் சுற்றிப் பார்த்தேன்.

நான் இருந்த இடத்திற்குக் கீழே, பாறைச் சரிவில் ஒரு சுனை; தூரத்துச் சூரியனின் பளபளப்பு அதில் ஒரு கணம் மின்னியது. அங்கு இறங்கித் தாகத்தைத் தீர்த்துக் கொண்டு, ஆகவேண்டிய காரியத்தைப் பார்க்கலாம் என்று நினைத்தேன்.

மலைச்சரிவில் நேரே செங்குத்தாக இறங்க வழியில்லை. சிறிது சுற்றி இரண்டு மைல் நடந்து அந்தச் சுனையருகில் வந்து சேர்ந்தேன். கோபுரம் போல் குவிந்து சரிந்த இருபாறைகளுக்கிடையில் உள்ள ஒரு குகையில் சுனை. அதில் பெருக்கெடுக்கும் நீர் வழிந்து ஒரு சிறிய தடாகமாக முன்பக்கத்தை நிறைத்தது. தரை தெரியும்படியாக அவ்வளவு தெளிவாக இருந்தாலும் குறைந்தது நாற்பதடி ஆழமாவது இருக்கும். உள்ளே சிறு மீன்களும் கறுப்புத் தவளைக் குஞ்சுகளும் பளிச் பளிச்சென்று மின்னி ஓடின.

பாறைச் சரிவில் நின்று இரு கைகளாலும் அள்ளி அள்ளித் தண்ணீரைக் குடித்தேன். அளவுக்கு மிஞ்சிக் குடித்ததினால் சிறிது சோர்வு. வலிக்கும் கால்களைத் தண்ணீரில் முழங்கால் அளவுக்கு விட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டேன். அப்பா, என்ன சுகம்!

பழையபடி எந்த வழியாகத் திரும்புவது என்பது பெரிய பிரச்னையாயிற்று. உட்கார்ந்து சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே யோசித்தேன்.

சுனைக்குப் பக்கத்தில், பாறைச் சரிவில் ஓர் உயர்ந்த ஆலமரம். நான் அத்தனை நேரம் அதைக் கவனிக்கவில்லை. அதன் ஓர் உச்சி நான் சிறிது நேரத்திற்கு முன் நின்றிருந்த உயர்ந்த மேட்டை எட்டியது. 'எத்தனை வயதிருக்கும்? பழங்கால விருட்சம்!' என்று எண்ணமிட்டுக் கொண்டே அண்ணாந்து பார்த்தேன்.

அந்த ஓரத்து உச்சிக் கிளையில் என்ன தொங்கிக் கொண்டிருக்கிறது? பழந்தின்னி வௌவால்! நரித் தலையும், தோல் இறகுகளும் பிரம்மாண்டமாக இருக்கும். காசித் தேவர் இந்த ஜாதி வௌவால்-

386

வேதாளம் சொன்ன கதை