உள்ளடக்கத்துக்குச் செல்

மலரும் உள்ளம்-1/காணாத முள்

விக்கிமூலம் இலிருந்து

குடுகு’டென்று விரைவிலே
கோபு ஓடி வந்தனன்.

அப்பா, கடிகா ரத்திலே
அந்தச் சிறிய முள்ளையே

காண வில்லை! யாரதைக்
கழற்றிக் கொண்டு போயினர்?

ஓடிந்து விழுந்து போனதோ !
ஒன்றும் அறியேன் நான்”எனக்

கூறித் தந்தை தம்மையே
கூட்டி வந்து காட்டினன்.

பார்த்தார் தந்தை, முட்களை
பார்த்துப் பார்த்துச் சிரித்தனர்.

விஷயம் அறியாக் கோபுவோ
விளக்கிக் கூற வேண்டினன்.


கண்ணை மூடிக் கொள்ளுவாய்.
காட்டு கின்றேன், முட்களை”

என்று தந்தை கூறவே
இறுகக் கண்ணை மூடினன்.

சிறிது நேரம் சென்றதும்,
திறந்து பார்க்கக் கூறினர்.

கண்ணைத் திறந்து பார்த்ததும்
கண்டான் இரண்டு முட்களை!

மகிழ்ச்சி பெற்ற கோபுவும்
மந்தி ரந்தான் என்னவோ!

எனக்குத் தெரியச் சொல்லுவீர்”
என்று கெஞ்சிக் கேட்டனன்.

கோபு தெரிந்து கொள்ளவே
கூற லானார், தந்தையும்..

பார்த்தாய் கடிகா ரத்தினை,
பன்னி ரண்ட டிக்கையில்.

சிறிய தன்மேல் பெரியமுள்
சேர்ந்து ஒன்றாய் நின்றதால்,


பார்க்கும் போது ஒன்றுபோல்
பட்ட துன்றன் கண்களில்.

சிறிது நேரம் சென்றதும்
சேர்க்கை விலகிப் போனதே!

இதுதான் எனது மந்திரம்.
இல்லை வேறு தந்திரம்!”