உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/503

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நானும் குடும்ப நியதிகளுக்குக் கட்டுப்பட்டு, பல்லைத் துலக்கிவிட்டு, கொதிக்கும் காப்பித் தம்ளரைத் துண்டில் ஏந்தியபடி பத்திரிகைப் பத்திகளை நோக்கினேன்.

அப்போது ஒரு பிச்சைக்காரி, அதிலும் வாலிபப் பிச்சைக்காரி, ஏதோ பாட்டுப் பாடியபடி, "அம்மா, தாயே!" என்று சொல்லிக் கொண்டு வாசற்படியண்டை வந்து நின்றாள்.

நான் ஏறிட்டுப் பார்த்துவிட்டு இந்தப் பிச்சைக்காரர்களுடன் மல்லாட முடியாதென்று நினைத்துக் கொண்டு பத்திரிகையை உயர்த்தி வேலி கட்டிக் கொண்டேன்.

"உனக்கு என்ன உடம்பிலே தெம்பா இல்லை? நாலு வீடு வேலை செஞ்சு பொளெச்சா என்ன?" என்று அதட்டிக் கொண்டே நடைவாசலில் வந்து நின்றாள் என் மனைவி.

"வேலை கெடச்சாச் செய்யமாட்டேனா? கும்பி கொதிக்குது தாயே! இந்தத் தெருவிலே இது வரையில் பிடியரிசிக் கூடக் கிடைக்கவில்லை; மானத்தை மறைக்க முழத்துணி குடம்மா" என்று பிச்சைக்கார அஸ்திரங்களைப் பிரயோகிக்க ஆரம்பித்தாள்.

"நான் வேலை தாரேன்; வீட்டோ டவே இருக்கியா? வயத்துக்குச் சோறு போடுவேன்; மானத்துக்குத் துணி தருவேன்; என்ன சொல்லுதே!" என்றாள்.

"அது போதாதா அம்மா? இந்தக் காலத்திலே அதுதான் யார் கொடுக்கிறா?" என்று சொல்லிக்கொண்டே என் மனைவியைப் பார்த்துச் சிரித்து நின்றாள்.

"என்ன, நான் இவளை வீட்டோ டே ரெண்டு நாள் வெச்சு எப்படி இருக்கான்னுதான் பாக்கட்டுமா? எனக்குந்தான் அடிக்கடி இளைப்பு இளைப்பா வருதே" என்றாள் என் மனைவி.

"சீ! உனக்கு என்ன பைத்தியமா? எங்கேயோ கெடந்த பிச்சைக்காரக் களுதையை வீட்டுக்குள் ஏத்த வேண்டும் என்கிறாயே! பூலோகத்திலே உனக்கு வேறே ஆளே ஆம்பிடலியா?" என்றேன்.

வெளியில் நின்ற பிச்சைக்காரி 'களுக்' என்று சிரித்தாள். சிரிப்பிலே ஒரு பயங்கரமான கவர்ச்சி இருந்தது. என் மனைவி வைத்த கண் மாறாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மனசு முழுவதும் அந்த அநாமத்திடமே ஐக்கியமாகிவிட்டது போல் இருந்தது.

"முகத்தைப் பார்த்தா ஆள் எப்படி என்று சொல்ல முடியாதா? நீ இப்படி உள்ளே வாம்மா" என்று மேலுத்தரவு போட்டுக்கொண்டு அவளை உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளுக்குள்ளே பூரிப்புடன் அந்த மாய்மாலப் பிச்சைக்காரி பின் தொடர்ந்தாள். என்ன! நான் கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் பாதங்களையே பார்த்தேன். அவை தரைக்குமேல் ஒரு குன்றிமணி உயரத்துக்கு அந்தரத்தில் நடமாடின. உடம்பெல்லாம் எனக்குப் புல்லரித்தது. மனப் பிரமையா? மறுபடியும் பார்க்கும்

502

காஞ்சனை